புதுவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் துணை உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தமிழ்செல்வன். இவரது மகன் தமிழ்நிதி( 18). கதிர்காமம் அரசு கல்லூரியில் படித்து வரும் இவர் வழக்கம் போல இன்று தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
மூலக்குளம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் வந்தபோது போக்குவரத்து இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை வண்டியின் பின்புறத்தில் இவர் வாகனம் மோதியதில் தலையில் அடிபட்டு, தமிழ் நீதி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் தமிழ்நிதியை அரசு மருத்துவமனை கொண்டு செல்ல தனியார் மருத்துவமனையிடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர். ஆனால் அந்த தனியார் மருத்துவமனை ஆம்புலனஸ் தர மறுத்துள்ளது.
மாணவனுக்கு முதலுதவி சிகிச்சையும் செய்ய முன்வரவில்லை என கூறப்படுகிறது. பின்னர் வேறோரு வாகனத்தில் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தமிழ்நிதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் குப்பை வண்டியை அடித்து நொறுக்கியதுடன் ஆம்புலனஸ் தராத தனியார் மருத்துவமனை முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“