வங்கக் கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் புதுச்சேரியை தாக்கியது. புதுச்சேரியில் சனிக்கிழமை காலை முதல் சூறாவளி காற்றுடன் விடிய, விடிய கனமழை பெய்து கோரதாண்டவம் ஆடியது. இதனால் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது.
மேலும், வரலாறு காணாத வகையில் 50 செ.மீ. மழை கொட்டித் தீர்த்த நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான வீடுகளின் தரைத் தளம் வெள்ளத்தில் மூழ்கியதால் அவர்கள் முதல் மாடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெங்கட்டாநகர், ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் இந்திய ராணுவ வீரர்கள் மீட்டனர்.
சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. நகர சாலைகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் வாகன போக்குவரத்து அடியோடு நின்று போனது. ஞாயிறு காலையும் பலத்தக் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கினர்.
நகரப் பகுதியில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. நகரம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்தும், பெயர்ந்தும் விழுந்தது. சில இடங்களில் மரங்கள் மின் கம்பங்கள், மின் வயர்கள் மீது விழுந்தது. ஒரு சில இடங்களில் மின் கம்பங்களே முறிந்தது. இதனால் நகர பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்ததால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள், நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசித்தவர்களை வருவாய் துறையினர் அப்புறப்படுத்தி முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வீடுகளுக்குள் சிக்கிய 500க்கும் மேற்பட்டோரை இந்திய ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், புதுச்சேரி போலீசார், தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கடந்த 2 நாட்களாக பெரும்பாலான பஸ்கள், டெம்போக்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. வரலாறு காணாத புயல், கனமழை, சூறாவளிக் காற்றால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. ஞாயிறு பிற்பகலுக்கு பிறகு மழை குறைந்தது. இதனால் சாலைகள், வாய்க்கால் வெள்ள நீர் மெல்ல வடிய தொடங்கியது. இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருந்த வெங்கட்டாநகர், கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் வடியத்தொடங்கியுள்ளது. வீடுகளில் இருந்த நீரும் வடிந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மழை இல்லை. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரத்தொடங்கினர். பணிகளுக்கும் சென்றனர். பஸ் போக்குவரத்தும், ஆட்டோ, டெம்போ போக்குவரத்தும் துவங்கியது. இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இரண்டு நாட்களுக்கு பிறகு 3-ம் நாளான இன்று நண்பகல் முதல் மின்விநியோகம் பல பகுதிகளில் தரப்பட்டது. பல பகுதிகளில் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீரை மோட்டார் வைத்து எடுத்தனர். பலரும் வீடுகள், கடைகளில் நீரில் நனைத்த பொருட்கள் இருக்கைகளை வெயிலில் காயவைத்து வருகின்றனர்.
மதுபான கடைகள் மூடல்
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க கடலூர்- புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள மதுபான கடைகளை மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.