புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (12-07-2023) நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, பொலிவுறு நகரத் திட்டத் தலைமை நிர்வாக அதிகாரி மணிகண்டன், போக்குவரத்துத் துறைச் செயலர் முத்தம்மா, துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, மாவட்ட ஆட்சியர் வல்லவன், பொதுப்பணி, போக்குவரத்து, மின்துறை, உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி, சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், புதிய திட்டங்களுக்கான முன் வரைவு அறிக்கைகளை தயாரிக்கவும் துணைநிலை ஆளுநர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து, உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ நேரு முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து, புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் தேக்க நிலையில் உள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி பணிகளை விரைந்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“