புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் தனியார் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கண்டித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் தானாம்பாளையம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் நோணாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்தப் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் அந்த சிறுமி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது சரியான முறையில் பதிலளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுமியின் உறவினர்கள் தவளக்குப்பம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி-கடலூர் சாலையில் 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர், சம்பந்தப்பட்ட பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி பள்ளியை சூறையாடினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இருப்பினும் சிறுமியின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதுச்சேரி, தவளக்குப்பம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் நாளை (15.02.2025) நடைபெறுவதாக இருந்த பிராக்டிகல் தேர்வுகள் (Practical Exams) அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.