பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
மின்கட்டண உயர்வை கண்டித்தும், மக்கள் விரோத ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசை கண்டித்தும் இன்று மின்துறை தலைமை அலுவலகம் முன்பு, அ.தி.மு.க மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அ.தி.மு.க-வினர் தங்களது கழுத்தில் மின்சார ஒயர்களை மாட்டிக்கொண்டும், அலுவலகத்தின் கதவை இழுத்து பூட்டி தர்ணாவில் ஈடுபட்டும் கோஷங்களை எழுப்பினர். இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க மாநில கழக செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி அரசானது ஆண்டுக்கு இரண்டு முறை மின்கட்டண உயர்வை உயர்த்தி ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வினை ஆளும் பா.ஜ.க கூட்டணி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கான மின் இணைப்புகள் உள்ளன. முதல் 100 யூனிட் உபயோகம் செய்யும் மக்களுக்கு ரூ.2.25-லிருந்து 45 பைசா உயர்த்தி ரூ.2.70 ஆகவும் 101-ல் இருந்து 200 வரை யூனிட் உபயோகம் செய்யும் மக்களுக்கு ரூ.3.25-லிருந்து 75 பைசா உயர்த்தி ரூ.4 ஆகவும், 201 முதல் 300 வரை உள்ள யூனிட்டுகளுக்கு ரூ.5.40-லிருந்து 60 பைசா உயர்த்தி ரூ.6 ஆகவும், 301-லிருந்து அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டுகளுக்கு ரூ.6.80-லிருந்த 70 பைசா உயர்த்தி ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/f4d2daf9-b73.jpg)
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிற்கும் உபயோகப்படுத்தும் மின்சாரத்திற்கு நிலை கட்டணமாக ரூ.40 இருந்தது. அதை ஒவ்வொரு கிலோவாட்டிற்கும் தற்போது ரூ.35 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். ஒரு வீட்டிற்கு 20 கிலோவாட் மின்சாரம் தேவை என்று மின்துறையிடம் ஆரம்பத்தில் விண்ணப்பம் செய்திருந்தால் தற்போது அவர்கள் மாதந்தோறும் சுமார் ரூ.700 நிலை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. ஒரு வீட்டிற்கு ரூ.40-ஆக இருந்த நிலை கட்டணம் ஏறத்தாழ சுமார் ரூ.700-ஆக உயர்த்தப்பட்டள்ளது. அதே போன்று வர்த்தக வியாபார நிறுவனங்களுக்கு நிலை கட்டணமாக மொத்தமாக ரூ.40 ரூபாயாக இருந்தது. தற்போது ஒவ்வொரு கிலோவாட்டிற்கு ரூ.200 என மனம் போன போக்கில் அதிகமாக உயர்த்தியுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் மாதந்தோறும் மின்கட்டணம், அபராத கட்டணம், நிலை கட்டணம், மின்விலை ஈடுகட்டுவதற்கான கூடுதல் வரி கட்டணம், காலதாமத கட்டணம் ஆகிய தலைப்புகளில் மக்களை அரசு புது புது தலைப்பின் கீழ் மின்கட்டண வரிகளை சேர்த்து வசூலிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் மின் விலையை ஈடுகட்டுதலில் நடைபெற்ற பாக்கி தொகையை சரி செய்ய தற்போது 10 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.
இது மட்டுமின்றி மின்திருட்டில் ஏற்படும் லைன் லாஸ் சம்பந்தமாகவும் பொதுமக்களிடம் வரி வசூலிக்கப்படுகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் நுகர்வோர் மூலம் வரி போடப்படுகிறது. எதற்கெடுத்தாலும் மின்கட்டண உயர்வை சுட்டிக்காட்டும் பொழுது கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் படி நாங்கள் செயல்படுகிறோம் என ஒரு காரணத்தை அரசு சுட்டிக்காட்டுகிறது.
இந்த இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது. மின்கட்டண உயர்வுகளை ஆளும் அரசு மின்துறை சார்பில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்ட பிறகு இந்த கட்டண உயர்வுக்கு இணை ஆணையம் ஒப்புதல் அளிக்கிறது. உண்மை நிலை இவ்வாறு இருக்க அரசு மின்கட்டண உயர்வை உயர்த்திவிட்டு எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று கூறுவது வெட்கக்கேடான செயலாகும்.
அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரம் உபயோகப்படுத்தப்படும் அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று புதுச்சேரியிலும் அனைத்து வீடுகளுக்கும் முதல் 150 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்க வேண்டும் அல்லது உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரி மாநிலம் மின்மிகு மாநிலமாக உள்ளது. மின்துறையும் லாபத்துடன் இயங்கி வருகிறது. லாபத்துடன் இயங்கும் இந்த மின்துறையை தனியார் மயமாக்க ஆளும் அரசு அமைச்சரவையில் கொள்கை முடிவெடுத்துள்ளது. இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இருப்பினும் மின்துறையை வாங்கியுள்ள தனியார் நிறுவனம் எதிர்காலத்தில் சிரமப்பட கூடாது என்பதற்காக மின் கட்டண வசூலில் ப்ரீபெய்டு சிஸ்டத்தை ஆளும் அரசு கொண்டுவந்துள்ளது. அதே போன்று தாறுமாறாக மின்கட்டண உயர்வை உயர்த்தி எதிர்காலத்தில் மின்துறையை வாங்கியுள்ள தனியார் நிறுவனம் பயன்பெறும் விதத்தில் அரசு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இந்த பிரச்சனையில் துணைநிலை ஆளுநர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் 500 ரூபாயாக மாதந்தோறும் வசூலிக்கப்பட்ட மின்கட்டணம் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு மாதந்தோறும் 3000 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மின்கட்டண உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயரும். ஆளும் பாஜக அரசு இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய அளவில் அதிமுக தொடர் போராட்டங்களை நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“