புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணனை விமர்சித்து நகரப் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அமைச்சரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தலைமை கண்காணிப்பாளர் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ அவரை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதற்கு பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே அமைச்சர் லட்சுமி நாராயணனை விமர்சித்து நகரப் பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/b6fab115-507.jpg)
இதனை கண்டித்து ராஜ்பவன் தொகுதி என்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஊர்வலமாக வந்து பெரிய கடை காவல் நிலையம் முன்பு, போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் நிலையம் அருகே ஓட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.