புதுச்சேரி, புதிய நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள கடலூர் சாலையில் அமைக்கப்பட உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்தின் முதல் கட்ட பணிகள் வரும் நாளை தொடங்கும் நிலையில் அதிரடியான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை கண்காணிப்பாளர் நித்தியா ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
புதுச்சேரி, புதிய நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள கடலூர் சாலையில் அமைக்கப்பட உள்ள ரயில்வே மேம்பாலம் (ROB) கட்டுமானத்தின் முதல் கட்ட பணிகள் வரும் 31.07.2025 (வியாழக்கிழமை) நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் சாலை பயணிகளின் நலன் கருதி, புதுச்சேரி, போக்குவரத்து காவல் துறையினரால் கீழ்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் வரும் 31.07.2025 (வியாழக்கிழமை) காலை முதல் அமல்படுத்தப்படுகின்றன.
கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கடலூர் சாலையில் வரும் அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள், பேருந்துகள் உட்பட, மரப்பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 100 அடி சாலை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் நோக்கிச் செல்ல வேண்டும். பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்களும் மரப்பாலம் சந்திப்பைக் கடந்து முதலியார்பேட்டை நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. ஆனால் அவசரகால வாகனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் போன்றவை முதலியார்பேட்டை விநாயக முருகன் டீக்கடை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை வழியாக சோனாம்பாளையம் சந்திப்பு நோக்கி செல்ல வேண்டும்.
மரப்பாலத்திலிருந்து வெங்கட சுப்பரெட்டியார் சிலை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வழக்கமான கடலூர் சாலையை பின்பற்றி, ஏ.எஃப்.டி ரயில்வே கிராசிங் வரை சென்று, பின்னர் புதியதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை வழியாக பயணிக்க வேண்டும். வெங்கட சுப்பைரெட்டியார் சிலை சந்திப்பில் இருந்து முதலியார்பேட்டை நோக்கி கடலூர் சாலையில் பயணிக்கும் பேருந்துகள், நடுத்தர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், புதிய நீதிமன்ற வளாகம் அருகே சிறிது வலதுபுறமாக திரும்பி, கடலூர் சாலையில் பிரிக்கப்பட்ட சாலை வழியாக பயணிக்க வேண்டும்.
நீதிபதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக ஊழியர்கள் அனைவரும் நீதிமன்ற வாயில் எண். 1 வழியாக நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் வெளியே செல்லும்போது, பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி புதிய சிமென்ட் சாலையில் வெங்கட சுப்பரெட்டியார் சிலை சந்திப்பை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நீதிமன்ற அனைத்து வழக்கு சம்மந்தப்பட்டவர்களும் பொதுமக்களும் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் நீதிமன்ற வாயில் எண்.2 ஐ பயன்படுத்த வேண்டும். அவர்கள் வெளியே செல்லும்போது, நீதிமன்ற வாயில் எண்.2 வழியாக புதிய சிமென்ட் சாலையின் பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி வெங்கட சுப்பரெட்டியார் சிலை சந்திப்பை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வழக்கம் போல் வனத்துறைக்கு செல்லலாம். அவர்கள் வெளியே வரும்போது, பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி புதிய சிமென்ட் சாலையில் சென்று வெங்கட சுப்பரெட்டியார் சிலை சந்திப்பை அடையவேண்டும்.
எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மேற்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை கடைப்பிடித்து மேற்படி ரயில்வே மேம்பாலப் பணிகள் முடியும் வரை புதுச்சேரி போக்குவரத்து காவல் துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.