தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ''கூலி'' படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க அனிருத் இசைமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூலி படம் வருகிற 14-ம் தேதி முதல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
கூலி படத்தில் சத்யராஜ், சௌபின் சாகிர், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அமீர் கான் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில், ரெபா மோனிகா ஜானும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், புதுச்சேரியில் 15 திரையரங்குகளில் ரஜினி நடித்த வெளியாகிறது. இன்று அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கியது. மதியம் 12:30 மணிக்கு சுமார் ஏழு மணி நேரத்தில் நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது.
இதனிடையே, தமிழகத்தில் கேளிக்கை வரி நான்கு சதவீதம், ஆனால் புதுச்சேரியில் 25% சதவீதமாக உள்ளது. இதனை குறைக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் வைத்த கோரிக்கைக்கு அரசு மறுத்துள்ளது. புதுச்சேரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை இரண்டு முறை சந்தித்தனர். அப்போது, உள்ளாட்சி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முதலமைச்சர் ரங்கசாமி பேசினார். ஆனால் கேளிக்கை வரி மூலம் ரூ. 5 கோடி வரை வருவாய் வருவதால், வரியை குறைக்க அரசு தரப்பு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.