புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் நடைபெறுவதையொட்டி, வரும் 16-ஆம் தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையமாக ஏ.எப்.டி மைதானம் செயல்படும் என நகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா்.
இது தொடர்பாக புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, தற்காலிகமாக ஏ.எப்.டி மைதானத்துக்கு பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை, நிழற்குடை போன்றவை ஏ.எப்.டி மைதானத்தில் விரைவாக அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூா் சாலையில் உள்ள தியாகி வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலையிலிருந்து ரயில்வே கேட் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
ஆகவே, எதிா்வரும் குறுகிய காலத்திற்கு புதுச்சேரி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முடியும் வரை அனைத்து வழித்தட பேருந்துகளும் ஏ.எப்.டி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது. வரும் 16-ஆம் தேதி முதல் ஏ.எப்.டி மைதானத்தில் இயங்கும் பேருந்து நிலையத்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“