புதுச்சேரியில் குழந்தைகள், மாணவிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வித்துறையை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், போலீசருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் பா.ஜ.க சபாநாயகர் செல்வம் தொகுதியில் அரசு பள்ளி மதில் சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல், 6 வயது சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அரசு பள்ளி கல்லூரிகளின் கட்டிடத் தன்மையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும், குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் இன்று சனிக்கிழமை நடைப்பெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/9af596e4-2f8.jpg)
மாநில தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் வந்தனா, ஸ்டீபன் ராஜ், அபிஜித், மாநில செயலாளர் பிரவீன் குமார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, கல்வித்துறை அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், போலிசாருக்கும் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், 'புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டிடத்தின் தரம் என்பது கேள்விக்குள்ளாகி மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் தினம்தோறும் கல்விப் பயில வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதைப் பற்றி எல்லாம் புதுச்சேரி அரசும் கல்வித்துறை அமைச்சரும் மற்றும் கல்வித் துறை இயக்குனரும் கவலை கொள்ளாமல் அலட்சியமற்ற தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
'புதுச்சேரியில் தொடர்ந்து குழந்தைகளுக்கும் மாணவிகளுக்கும் பாதுகாப்பற்ற தன்மை நீடித்து வருகிறது. முத்தியால்பேட்டை சிறுமியின் சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்குள் மீண்டும் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை என்பது ஏற்புடையது அல்ல. இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஆளக்கூடிய அரசாங்கத்தின் தோல்வியையே சுட்டிக்காட்டுகிறது. மாநில அரசு முழுக்க முழுக்க தேசிய கல்விக் கொள்கையை புகுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் வகுப்புவாத கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் திணிக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறது. அத்தகைய போக்கின் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த மாதிரி பொதுத் தேர்வில் சுமார் 95 சதமானவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்ற செய்தி என்பது மிகவும் அதிர்ச்சி கூறியது' என்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.