/indian-express-tamil/media/media_files/kksT9bg5wzFvGw0MtrYs.jpg)
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதியில் வம்பாகீரப்பாளையம், திப்புராயப்பேட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியான நபர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் அ.தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி நகர்புறம் மற்றும் உப்பளம் சட்டமன்ற தொகுதியில் வீடற்ற ஏழை,எளிய மக்களுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், உப்பளம் வம்பாகீரபாளையம், திப்புராயபேட்டை அருகில் காலியாக இருந்த இடத்தில் அடுக்குமாடி வீடு கட்டும் திட்டம் துவக்கப்பட்டது.
வீடற்ற ஏழை எளிய மீனவ, மற்றும் அட்டவணை இனத்தை சார்ந்த சொந்த வீடு இல்லாதவர்களும், இதுவரை அரசு சார்பில் இலவச மனைப்பட்டா மற்றும் காமராஜர் வீடு கட்டும் திட்டத்தில் பயன் பெறாதவர்களுக்கும் இவ்வீடுகள் சுமார் 9.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 80 குடியிருப்புகள் இத்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுடள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள தகுதியின் அடிப்படையில் உப்பளம் தொகுதியைச் சேர்ந்த வீடற்ற ஏழை, எளியவர்களுக்கும், அரசு சார்பில் சாலை, கட்டிடங்கள், மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக குடியிருக்கும் வீடுகளை காலி செய்து கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் விருப்பு வெறுப்பின்றி தகுதியான ஏழைகளுக்கு வீடு ஒதுக்கீடு வழங்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது உப்பளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரின் நேரடி தலையீட்டில் தனது கட்சியைச் சேர்ந்த வசதி படைத்த பலருக்கு இவ்விடுகளை ஒதுக்கப் போவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது. ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட இந்த அடுக்கு மாடி வீடுகள் ஒரு கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கு ஒதுக்கப்படுவது சட்ட விரோத செயலாகும். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் தகுதியான ஏழை,எளிய வீடற்ற மக்களுக்கு வழங்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக வீடற்ற வம்பாகீரபாளையம் பகுதியில் உள்ள மீனவ சமுதாயத்தினருக்கும் திப்புராய பேட்டை பகுதியில் உள்ள அட்டவணை இனத்தவர்கள் மற்றும் தலித் கிருஸ்துவர்களுக்கும் ராசு உடையார் தோட்டம் பகுதியில் ரயில்வே பணிக்காக காலி செய்யப்பட்ட சுமார் 20 நபர்களுக்கும் முன்னுரிமை வழங்கி வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாண்புமிகு முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்காக கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் அரசியல் வாதிகளின் தலையீடுகளை ஆரம்ப நிலையிலேயே அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும் இவ்வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில், தாசில்தார், குடிசை மாற்று வரிய அதிகாரிகள் கொண்ட குழுவினை அமைத்து எவ்வித அரசியல் குறுக்கீடுகளும் இன்றி பயனாளிகள் நேர்மையாக தேர்ந்தெடுக்க மாண்புமி முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.