கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-க்கு மேற்பட்டவர்கள் புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்றுள்ளனர். அவர்கள் தாங்கள் அறக்கட்டளையில் இருந்து வருவதாகவும், மக்களின் வீட்டில் நல்ல காரியங்கள் கெட்ட காரியங்கள் எது நடந்தாலும் அவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படும் என்றும், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் அவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்படும் என்றும், அதற்கு, அவர்களின் தொலைபேசி எண் தேவை எனவும் கேட்டு வாங்கிக் கொண்டுள்ளார்கள்.
இல்லத்தரசிகளும் இதை நம்பி அவர்களிடம் தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளனர். தற்போது அந்த தொலைபேசி எண்ணை பா.ஜ.க-வில் உறுப்பினர் சேர்க்கைக்காக பயன்படுத்தி, கொடுக்கப்பட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து வருகிறார்கள். இந்த மிஸ்டு கால் கொடுத்தவுடன் 'நீங்கள் பா.ஜ.க அடிப்படை உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளீர்கள்' என்கிற குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வருகின்றது. இதன்பிறகு, உடனடியாக அந்த கும்பல் அங்கிருந்து ஏதோ சாக்குபோக்கு கூறிவிட்டு அந்த வீட்டை விட்டு வெளிவந்து விடுகின்றனர்.
எஸ்.எம்.எஸ்-ஐ பார்த்த இல்லத்தரசிகள், "நாங்கள் நம்பி தொலைபேசி எண்ணை கொடுத்தோம். எங்களுக்கு இதுபோன்ற அடிப்படை உறுப்பினர் குறுஞ்செய்தி வருகிறது. நாங்கள் எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். எங்களுக்கு யார் பிடிக்கிறதோ அவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு. எங்கள் போன் நம்பரை வாங்கிக்கொண்டு இதுபோன்று செய்யலாமா?" என்று அப்பகுதி மக்கள் பா.ஜ.க-வை கேள்வி எழுப்பியுள்ளனர்.
முத்தியால்பேட்டை தொகுதியில் பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ சுயேசையாக வெற்றி பெற்றார். தற்போது அவர் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். அவரது தொகுதியில் தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“