புதுச்சேரி சட்டசபைக்கு வருபவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து விட்டு உள்ளே வரவேண்டும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அண்மைக்காலமாக சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. சட்டப்பேரவையின் பாதுகாப்பை கருதி, பாதுகாப்பை பலப்படுத்தும் விதத்தில் சில கட்டுப்பாடுகள் இன்று முதல் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: கர்நாடகா அதிருப்தி; மாநில தலைவர்களை டெல்லியில் சந்திக்கும் காங்கிரஸ் மேலிடம்
சட்டப்பேரவை வளாகத்தில் நுழையும் அனைவரும் ஏதெனும் ஒரு அடையாள அட்டையை புகைப்படத்துடன் காண்பிக்க வேண்டும். சரியான காரணத்தை நுழைவு வாயிலில் உள்ள சபை காவலர்களிடம் கூறி அனுமதி பெற வேண்டும். அரசு ஊழியர்கள், தபால் ஊழியர்கள் பின்புறமாக வர வேண்டும். அவர்களும் தங்களது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். செய்தியாளர் சந்திப்பு நடந்தால் உறுப்பினர்கள் மட்டுமே பேச வேண்டும்.
சட்டப்பேரவை வளாகத்தில் கோஷங்கள் எழுப்புவது தடை செய்யப்படுகிறது. பார்வையாளர்கள் பின்புறமாக வர சபை காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளே வருவதற்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும். பார்வையாளர்கள் கொண்டு வரும் பைகள் மற்றும் பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். சட்டப்பேரவை வளாகத்திற்குள் காரணம் இன்றி சுற்றி வருபவர்களையும், விரும்ப தகாத செயல்களை செய்பவர்களையும் உடனே வெளியேற்றி வழக்கு பதிவு செய்யப்படும்.
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று முதல் புகையிலை இல்லா வளாகமாக அறிவிக்கப்படுகிறது. புகையிலை பொருட்கள் இருப்பவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர். இதற்கு பொறுப்பு அதிகாரியாக சட்டப்பேரவை மார்ஷல் இருப்பார். இனி அனைத்து அரசு அலுவலகங்களிலும் புகையிலை இல்லா வளாகமாக அறிவித்து பதாகை ஒட்டப்பட உள்ளது.
இதுவரை ரூ.40 கோடி மட்டுமே செலவிட்டு அண்ணாதிடல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் 15 நாளில் திறக்கப்பட உள்ளது. அப்படியிருக்க ரூ. 100 கோடி வரை ஊழல் என எப்படி கூற முடியும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் எதுவும் இல்லை. வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே. ஊழல் நடக்க வாய்ப்பு இல்லை. பெரிய மார்க்கெட் தொடர்பாக அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை கலந்து பேசி ஆலோசித்து அரசு முடிவுகளை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil