புதுச்சேரியில் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவில்லை என்றும் அவர் நீக்கம் செய்யப்பட்டார் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அமைச்சராக இருந்த என்.ஆர். காங்கிரஸின் சந்திரபிரியங்கா நேற்று முன்தினம் திடீரென பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜினாமா தொடர்பாக அனுப்பிய கடிதத்தில் ஜாதிய பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் தலித் பெண் என்பதால் ஒடுக்கப்படுகிறேன் என்று வேதனை தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக தற்போது சபாநாயகர் செல்வம் அளித்த பேட்டியில்,
புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது துறையை சரிவர கவனிக்காததால் கடந்த வாரம் முதலமைச்சர் ரங்கசாமி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் கொடுத்தார்.
இதை அறிந்து கொண்ட அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் கடிதம் கொடுத்துள்ளார். அவர் ராஜினாமா செய்யவில்லை, அவரது செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தாலேயே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சந்திர பிரியங்கா நீக்கம் குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் முதலமைச்சருக்கு கொடுத்துள்ள அரசியல் உரிமையை கேள்வி கேட்கக் கூடாது என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்
புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் லட்சுமி நாராயணன்,
புதுவையில் 40 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பெரும்பான்மை சமூகமான வன்னியர்களுக்கும், தலித்துகளுக்கும் எத்தனையோ துரோகத்தை அவர்கள் செய்துள்ளனர் என்றும் கந்தசாமிக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் எதுவுமே செய்ய வில்லை என தொடர்ந்து ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
பட்ஜெட்டில் அறிவித்த அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம்.இவற்றையெல்லாம் மறைக்கும் விதமாக தொடர்ந்து இழிவான, மலிவான, சாதி ரீதியான பிரச்சினையை கையில் எடுத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது என குற்றம் சாட்டினார்.
சந்திர பிரியங்கா ராஜினாமா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,
முதலமைச்சருக்கு ஒரு அமைச்சரை நியமிக்கவும், நீக்கவும் முழு உரிமை உள்ளது. அதற்கான காரணத்தை கூற வேண்டிய அவசியம் இல்லை. சந்திர பிரியங்கா தனிப்பட்ட யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை.
பொத்தாம் பொதுவாக பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக கூறியுள்ளார். இதற்கு எப்படி பதிலளிக்க முடியும்? குறிப்பிட்ட ஒருவர் மீது குற்றம்சாட்டினால் அதற்கு பதிலளிக்கலாம் என்றார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“