புதுச்சேரி சட்டபேரவை வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி கூட உள்ளதாகவும், 2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் சபாநாயகர் செல்வம் இன்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டபேரவையில் உள்ள தனது அறையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், ”புதுச்சேரி 15 வது சட்டபேரவையின் 5வது கூட்டத்தொடரின் 2வது பகுதி பிப்ரவரி 12 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான அரசின் கூடுதல் செலவீனங்களுக்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது.
தொடர்ந்து சபை எத்தனை நாட்கள் நடத்தப்படும் என அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும். அதனைத் தொடர்ந்து 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மேலும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரை முழுவதுமாக காகிதம் இல்லா தொடராக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” இவ்வாறு சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி