India | Puducherry - புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 20-ம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் சபாநாயகர் செல்வம் பேசியதாவது:-
புதுச்சேரி அரசின் 15-வது சட்டப்பேரவையிலன் 4-வது கூட்டத்தொடரின் 2-ம் பகுதி செப்டம்பர் மாதம் 20-ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்று சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடத்துவது என அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும்.
என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. கூறியிருக்கிறார். எனது மடியில் கனமில்லை.
சட்டமன்றம் கட்ட ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தை 2008-ம் ஆண்டு் சென்னை உயர்நீதிமன்றம் நிலத்தை உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார். ஆனால் 2009-ம் ஆண்டு சபாநாயகராக இருந்த ராதாகிருஷ்ணன், அப்போது முதலமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ப்ளீஸ் டிஸ்கஸ் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்போது சட்டப்பேரவைக்கான இடத்தை உரியவரிடம் ஒப்படைக்காமல் 2018-ம் ஆண்டு வைத்திலிங்கம் சபாநாயகராகவும், நாராயணசாமி முதலமைச்சராகவும் இருந்த போது அவசர அவசரமாக ஒப்படைக்க காரணம் என்ன. இதில் என்ன மர்மம் உள்ளது. இதில் முறைகேடுகள், ஊழல் நடந்துள்ளது. வைத்திலிங்கம் விருப்பப்பட்டால் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு நான் தயார்.
கடலோர கிராமங்களில் நிலத்தடியில் மின் புதைவடம் கேபிள் புதைக்க மத்திய அரசு நிதியில் 11 கோடி ரூபாயில் 2 கோடி தான் செலவிடப்பட்டது. அதிலும் ஊழல் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரி நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உத்தரவிடுவேன். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருக்கும் போதே மாநில அந்தஸ்து பெருவோம். அந்த நம்பிக்கை உள்ளது. இந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதிகாரிகள் செய்த சிறு தவறால் கேஸ் மானியம் வழங்கப்படாமல் இருந்தது. அது இப்போது சரி செய்யப்பட்டது. இரண்டு தினங்களில் அந்த மானியம் செலுத்தப்படும்.
புதிய சட்டப்பேரவை கட்ட ரூ.612 கோடி திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் டெண்டர் கோரப்படும். டிசம்பர் மாதம் பூமி பூஜை நடத்தப்படும். இரண்டு வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டு எங்களது கூட்டணி கட்சி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி தலைமையில் திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.