புதுச்சேரியில் ஒரே எஃப்.ஐ.ஆரில் 2 வழக்குகள் பதியப்பட்டது தொடர்பாக எஸ்.பி செல்வம் மீது தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் புகார் சம்பந்தப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகல்களுடன் துணைநிலை ஆளுநரிடம் புகார் மனுவை இன்று வழங்கினார்கள்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அளித்துள்ள புகாரில், "கடந்த 2017 ஆம் ஆண்டு புதுச்சேரி பெரிய கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தவர் தற்போதைய காவல் கண்காணிப்பாளர் செல்வம். அவர் பணி செய்த காலத்தில் மூன்று போஸ்கோ வழக்குகள் பதியப்பட்டு அவரால் விசாரிக்கப்பட்டது. ஆனால், சரிவர விசாரணை செய்யாமல் அவருடைய பணியில் அலட்சியமாக இருந்தார்.
குறிப்பிட்ட காலத்தில் வழக்குப்பதிந்து நீதிமன்றத்திற்கு போதுமான தகவலை மற்றும் கோப்புகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. மேலும் அவர் பணி செய்த காலத்தில் அலட்சியமாக இருந்ததால், அந்த வழக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் எதிரிகளிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதாயம் பெற்றிருக்கலாம். அந்த அடிப்படையில் அவர் மீது அப்போதைய டி.ஜி.பி ஶ்ரீ பாலாஜி ஸ்ரீ வஸ்தா மற்றும் ஐ.ஜி.பி சுரேந்திரா சிங் யாதவ் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று 28.09.2019 அன்று பெரிய கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் செந்தில்குமார் எஃப்.ஐ.ஆர் 141/ 2019 ஒன்றை குற்றவியல் பிரிவு 409 பதிவு செய்தார்.
பிறகு அன்றைய தேதியில் அதே எஃப்.ஐ.ஆர் எண்ணில், அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் அதே எண்ணில் இந்த வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒருவரான அமுல்ராஜ் என்பவரின் வழக்காக மாற்றி எஃப்.ஐ.ஆர்-ஐ சட்டத்திற்கு விரோதமாக திருத்தம் செய்துள்ளார். எனவே இது சம்பந்தமாக இரண்டு எஃப்.ஐ.ஆர்-களும் சட்டத்துக்கு புறம்பாக எப்படி பதியப்பட்டது என்று காவல் கண்காணிப்பாளர் செல்வம் மற்றும் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.