புதுச்சேரியில் 3 இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி சத்யா உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் பிரபல தாதா தெஸ்தான் மகன் ரஷி, திடீர் நகரை சேர்ந்த தேவா,ஜெ.ஜெ நகரை சேர்ந்த ஆதி ஆகிய 3 இளைஞர்கள் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் டி.வி நகரை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா கொலை செய்தது தெரியவந்தது.
விசாரணையில் முன்பகை காரணமாக 3 பேரையும் கடத்தியதாகவும், பாழடைந்த கட்டடத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி கொன்றதாகவும் ரவுடி சத்யா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.