Advertisment

ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து: புதுச்சேரியில் தமிழக அமைச்சர் அன்பரசன் கொடும்பாவி எரிப்பு

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசி விமர்சனம் செய்த அமைச்சர் தா.மோ.அன்பரசனை கண்டித்து புதுச்சேரி மாநில அ.தி.மு.க-வினர் அவரது கொடும்பாவியை எரித்தனர்.

author-image
WebDesk
New Update
Puducherry TN minister TM Anbarasan Kodumbavi burnt Slanderous comment on Jayalalithaa Tamil News

 

Advertisment

பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

காஞ்சிபுரத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், "தி.மு.க. ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் தி.மு.க.வினர் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் வருவார்கள். 

நடிகர்களை ரசிக்கலாம், அதோடு வந்துவிட வேண்டும். முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் முதலமைச்சர் ஆவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோடு முடிந்தது. இனி யாரும் எடுபட முடியாது" என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருத்துக்கு அ.தி.மு.க-வினர் பதிலடி கொடுத்தும், அவரைக் கண்டித்தும் வருகிறார்கள். 

இந்த நிலையில், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசி விமர்சனம் செய்த அமைச்சர் தா.மோ.அன்பரசனை கண்டித்து புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன மறியல் ஆர்ப்பாட்டம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக் கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது, அமைச்சர் அன்பரசனின் புகைப்படத்தை கிழித்து எறிந்தும், தீயிட்டு கொளுத்தியும், அவரை பதவி நீக்கம் செய்ய கோரி அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதன்பின்னர் செய்தியாளரிடம் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் பேசுகையில், "மனித தெய்வங்களாக கழகப் பொதுச்செயலாளராக வணங்கப்படும், மக்களால் எக்காலத்திலும் போற்றப்படும் ஒப்பற்ற தலைவர்களான புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி தொண்டர்கள் மனம் நோகும் அளவில் கேலி செய்து அவதூராக பேசிய தமிழக தி.மு.க அமைச்சர் அன்பரசன் புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

மறைந்த தலைவர்களை பற்றி பிறர் மனம் நோகும் வண்ணம் பேசுவது அவர்களின் வக்கிர புத்தியின் செயலை வெளிப்படுத்துவதாகும். அரசியல் கட்சியை தற்போது துவக்கியுள்ள திரு.விஜய் பற்றி விமர்சனம் செய்வதாக இருந்தால் நேரடியாக அவரைப் பற்றி பேசுவது நல்ல அரசியல்வாதிக்கு அழகாகும். அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த எங்கள் புரட்சித்தலைவி அம்மா பற்றி கேவலப்படுத்தி பேசுவதும், அப்படி பேசிய ஜந்து தங்களை மெச்சி கொள்ள வேண்டும் என்பதற்காக அங்குள்ள தி.மு.க-வினர் கைதட்டி சிரிப்பது இவை எல்லாம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்புடையதா? சினிமா நடிகர்களை தரம்தாழ்ந்து தற்போது பேசும் தி.மு.க-வினர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலஹாசனை தங்களது பொய் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திகொண்டது ஏன்?

இப்படிப்பட்ட தரம் தாழ்ந்து பேசுவது தான் அவர்கள் அமைச்சர்களாக நீடிப்பதற்கான அளவுகோலாக ஸ்டாலின் வைத்துள்ளாரா? திமுக அமைச்சரின் இது போன்ற கேடுகெட்ட வார்த்தை ஜாலங்களை வாய்மூடி மௌனமாக தமிழகம் முதல்வர் இருப்பது ஒரு மாநில முதல்வருக்கு அழகல்ல.

மறைந்த தலைவர்களை பற்றி அனாகரிகமாக பேசிய அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து தமிழக முதல்வர் நீக்க வேண்டும். அவ்வாறு நீக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலினால் முடியவில்லை என்றால், அமைச்சரின் அருவருக்கத்தக்க பேச்சின் செயலுக்கு முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Puducherry Aiadmk Jeyalalitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment