/indian-express-tamil/media/media_files/2025/10/19/puducherry-2025-10-19-18-49-43.jpg)
Puducherry
புதுச்சேரி, அக்டோபர் 19:
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து முதலமைச்சருடன் பேசி விரைவில் தீர்வு காணப்படும் எனவும் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், "பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். அதற்காக அவருக்கு புதுச்சேரி மாநில மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
ரூ.436 கோடி மேம்பாலத்திற்கு ஒப்புதல்:
இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் அமைப்பதற்கான கோப்புகள் பலமுறை திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகமானது ரூ.436 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த 13-ம் தேதி மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேரடியாக புதுச்சேரிக்கு வருகை தந்து, இந்த மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
மேலும், மரப்பாலம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரூ.100 கோடி அளவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் அவர் அளித்தார்.
மரப்பாலம் முதல் முள்ளோடை வரை ரூ.662 கோடியில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த ஒப்புதல் வழங்கப்படும் என்ற தகவலையும் மத்திய அமைச்சர் அறிவித்தார். இதற்காக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக நமச்சிவாயம் குறிப்பிட்டார்.
போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு:
"புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதனைச் சரி செய்ய அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. வெகு விரைவாக அந்த போக்குவரத்து நெரிசல்களைப் போக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முதல்வர் ரங்கசாமியுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கும்" என்று அமைச்சர் உறுதி அளித்தார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம்:
புதுச்சேரியில் பல்வேறு அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில், தனியார் துறையில் படித்து வெளியேறும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கையை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சோகோ (Zoho) நிர்வாகத்தின் தலைவரைத் தென்காசியில் நேரடியாகச் சந்தித்து, ஆண்டுக்கு 7,000 பொறியியல் மாணவர்கள் வெளியே வருவதால், அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர புதுச்சேரி மாநிலத்தில் ஒரு சோகோ சென்டரை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 'சுய சார்பு இந்தியா' திட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள சோகோ நிறுவனம் புதுச்சேரிக்கு வந்து தொழில் தொடங்க ஒப்புதல் அளித்ததற்கு சோகோ தலைவருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
பட்டதாரிகளுக்கு திறன் பயிற்சி:
சமூகப் பங்களிப்பின் மூலம் பட்டம் படித்த மாணவர்களுக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சி அளிப்பதற்கு குவாண்டம் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும், அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் பேசப்பட்டு விரைவில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி ஆரம்பிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
- பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us