புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் 2025 ஜனவரி 1 ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
"புதுச்சேரியில் மக்களுக்கு பாதுகாப்பு, சாலை விபத்துகளில் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து காவலதுறை,ஜீரோ உயிரிழப்பு திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஹெல்மெட் பயன்பாட்டை கட்டாயமாக்குவதை தொடங்கவுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் போக்குவரத்து காவல்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே ஜனவரி 1ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டப்படி ரூ.1000 அபராதம் மற்றும் 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் இருந்து தப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இரு சக்கர வானத்தில் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“