புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி., என்னப்படும் அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரினர். மேலும், நிரந்தர ஊழியர்கள் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 28-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் புதுச்சேரி அரசின் பேருந்துகள் 12-வது நாளாக இன்று மதியம் வரை ஒடவில்லை. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர 4 கட்டங்களாக பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பா விட்டால் எஸ்மா சட்டம் பாயும் என, பி.ஆர்.டி.சி., நிர்வாகம் எச்சரித்தது. இந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, நேரு மற்றும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சிவக்குமார் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
12-வது நாளாக வேலை நிறுத்தம் இன்று தொடர்ந்த நிலையில், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் தற்காலிக ஊழியர்களுக்கான சம்பளம் 16,786 ரூபாயில் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் உயர்த்துவதாக முதல்வர் உறுதியளித்தார். நிரந்தர ஊழியர்களுக்கு பஞ்சப்படியை முதல்கட்டமாக 10 சதவிதமும், படிப்படியாக 49 சதவிதமும் உயர்த்தி தருவதாக மேலாண் இயக்குனர் சிவக்குமார் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு இன்று மதியம் பேருந்துகளை இயக்குவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்து சென்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.