பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி அருகே 1400 சுனாமி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இங்கே அடிக்கடி மீனவர்களுக்குள் பிரச்சினை ஏற்படுவதாக கூறி புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர் குமார் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். ஆனால், சமூக ஆர்வலர் குமார் அவருடைய முழு ஒத்துழைப்பின் பேரில் காலப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் அரசு சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சமூக ஆர்வலரான குமார் மீது புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையத்தில் திடீரென கடந்த 3-ந் தேதி அன்று காலாப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் குமார், காலப்பட்டு பகுதியில் புற காவல் நிலை அமைக்க ஒத்துழைப்பு கொடுத்ததற்கு குடியிருப்பு வாழ் மக்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்காக சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு தனது தொண்டர்களுடன் புறப்பட்ட குமார் ஆட்டோவில் கட்டப்பட்ட ஒலிபெருக்கியில் மன்னிப்பு கேட்பதாக கூறிக்கொண்டு கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் வீடு வீடாக சென்று அனைவரின் காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு புற காவல் நிலையம் அமைக்க ஒத்துழைப்பு கொடுத்த தன்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தால் சுனாமி குடியிருப்பு பகுதியில் மேலும் பரபரப்பு நிலவியது. போராட்டம் குறித்து சமூக ஆர்வலர் குமார் கூறும் போது, காலாப்பட்டு பகுதியில் கடந்த இருபது ஆண்டுகாலமாக மக்கள் நலன் சார்ந்த நற்பணிகளை செய்துவரும் நான் பொது
மக்களின் எதிர்ப்பை மீறி, குடியிருப்பு பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க போலீசாருடன் உறுதுணையாக இருந்து செயல்பட்டதை தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சுனாமி குடியிருப்பு மக்களாகிய உங்கள் எதிர்ப்பை மீறி புற காவல் நிலைய அமைக்க ஒத்துழைப்பு கொடுத்த என்னை மன்னித்து விடுங்கள் என்று போராட்டம் நடத்தியதாகவும் மேலும் காலப்பட்டு பகுதியில் உள்ள போலீசார் இங்கு உள்ள தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக செயல்படுவதற்காக தன்னை அச்சுறுத்தும் வகையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil