புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விரைவாக செயல்பட்டு ராஜீவ்காந்தி சதுக்க மேம்பாலத்தை கட்ட மத்திய அரசின் அனுமதியும், நிதியும் பெற்று கட்ட வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் பாராளுமன்ற மக்களவை உறுப்பினரும், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வைத்திலிங்கம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
’புதுச்சேரி நகரப்பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு மேம்பாலங்கள் கட்டுவது, சாலைகளை அகலப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ராஜீவ்காந்தி சதுக்கம் முதல், இந்திராகாந்தி சதுக்கம் வரை மேம்பாலம் கட்ட வேண்டியது மிக முக்கிய தேவையாக உள்ளது.
இத்திட்டத்தை மத்திய அரசு மூலம் நிறைவேற்ற கடந்த 2019ம் ஆண்டு முதலே பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றேன்.
ஆனால் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்றத்திலும் கேள்வி மூலம் வலியுறுத்தினேன்.
அதற்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இசிஆர் சாலையில் காலாப்பட்டில் இருந்து புதுச்சேரி மற்றும் திண்டிவனம் சாலை வழியாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் சாலையை இணைக்கும் புற வழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்க இருப்பதாக பதில் கூறியுள்ளார்.
இதன் மூலம் ராஜீவ்காந்தி சதுக்கத்தில் பாலம் அமைக்கும் பணியை எடுத்து கொள்ள போவதில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த புறவழிச்சாலை அமைத்தாலும் புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடாது. அத்துடன் ராஜீவ்காந்தி சதுக்கம் பகுதி தேசிய நெடுஞ்சாலை அந்தஸ்தை இழக்கும். அதனால் அப்பகுதியில் பாலம் கட்டுவதற்கான செலவு முழுமையாக புதுவை அரசே ஏற்கவேண்டிய நிலையும் ஏற்படும்.
எனவே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விரைவாக செயல்பட்டு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சதுக்க மேம்பாலம் அவசியத்தை எடுத்துரைத்து கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் இருந்து மரப்பாலம் வரை மேம்பாலத்தை கட்ட மத்திய அரசின் அனுமதியும், நிதியும் பெற்று கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்’, இவ்வாறு வைத்திலிங்கம் அதில் தெரிவித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“