புதுச்சேரி மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அமைதி, ஆன்மிகம் தழைத்தோங்கும் புண்ணிய புதுச்சேரி பூமியில் சமீப ஆண்டாக கலாச்சார சீரழிவு தலைதூக்கியுள்ளது. உலகில் எங்கும் கிடைக்காத கொக்கைன், பெத்தடமைன், போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்ப்புகள் உட்பட போதை வஸ்துகள் புதுச்சேரியில் தாரளமாக புழங்குகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி அரசின் தாராளமய மது கொள்கையால் ஆயிரக்கணக்கான ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டு மது ஆறாக ஓடுகிறது. ஒழக்கம், கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டிய புதுச்சேரி மாநில மண்ணின் மைந்தர்கள், இளைஞர்கள் மது, போதை பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக முத்தியால்பேட்டையில் கஞ்சா போதை கும்பலால், சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநில தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் கணவரை பற்றியும், சகோதரர்களை பற்றியும், குழந்தைகளை பற்றியும் எண்ணி, எண்ணி கண்ணீர் விட்டு வருகின்றனர்.
பாரத நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு போதை பொருட்கள், தாராள மது கிடைப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து விபச்சாரம், குழந்தைகள் பாலியல் தொழிலும் தற்போது அதிகரித்துள்ளது. மாநில முதலமைச்சரே சுற்றுலா பயணிகள் மீதும், சுற்றுலா தொடர்பான செயல்பாடுகள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வரலாற்று பிழை உத்தரவை பிறப்பித்தார்.
இதனால் புதுச்சேரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற தைரியத்தில், சமூக வலைத்தளங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல் வெளிப்படையாகவே விளம்பரங்களை செய்கிறது. அதில், எந்த ஜோடிகள் வேண்டுமானாலும் எங்கள் எண்ணை தொடர்புகொண்டு, அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளனர். இது புதுச்சேரி மாநிலத்தின் பெருமைக்கு மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது.
புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சி என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான விடுதிகளுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகளை ஆராயாமல் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் யார் வந்து தங்குகிறார்கள்? என்பதை கண்காணிப்பதில்லை. புதுச்சேரி காவல்துறை எந்த விடுதியையும் சோதனை நடத்துவது இல்லை. உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் நகராட்சியும் இவற்றை கண்காணிப்பது கிடையாது.
சுற்றுலாத்துறையும் கண்டுகொள்வது இல்லை. இதனால் வாடகை வீடுகள், விபச்சார விடுதிகளாக மாறியுள்ளன. சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்யும் பாலியல் கும்பல் தங்கள் தொழிலை, புதுச்சேரி மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் நடத்துகின்றனர். இதனால் புதுச்சேரி மக்கள், தாய்மார்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, புழுங்கி வருகின்றனர். வெளிமாநிலத்தை சேர்ந்த சமூகவிரோதிகள் தங்கள் அடையாளத்தை மறைத்து வாழும் புகலிடமாக புதுச்சேரி மாறி வருகிறது.
சமீபத்தில் கூட கேரளாவை சேர்ந்த 2 குற்றவாளிகள் 15 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டனர். இதனால் புதுச்சேரியில் பிறந்து, வளர்ந்த மண்ணின் மைந்தவர்கள் வாழவே தகுதியற்ற மாநிலமாக புதுச்சேரி மாறி வருவது வேதனையானது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை புதுச்சேரி அரசு உணர வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் செயல்படும் அனைத்து விடுதிகளையும் அன்றாடம் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு காவல்நிலைய எல்லைக்குள்ளும் அனுமதியின்றி செயல்படும் அனைத்து விடுதிகள், வீடுகளுக்கு சீல் வைக்க வேண்டும். உரிய ஆதாரங்கள் இன்றி தங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. அப்படி ஆதாரமின்றி தங்க அனுமதிக்கும் விடுதிகளின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரிக்கு யார் வருகிறார்கள்? யார் தங்குகிறார்கள்? என முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக சுற்றுலா விசாரணை அதிகாரி என தனியாக ஒரு அதிகாரி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அமைதியான, ஆன்மிகம் நிறைந்த புதுச்சேரியின் பண்பாடை சீர்குலைக்கும் சமீபத்திய கலாச்சார சீரழிவுகளை மேதகு துணை நிலை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.