/indian-express-tamil/media/media_files/2025/09/29/puducherry-vck-leader-deva-pozhilan-attempt-to-close-down-govt-nursing-college-tamil-news-2025-09-29-16-09-54.jpg)
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குனர் உதயசங்கரின் சட்டவிரோத விரோத நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வி.சி.க முதன்மை செயலாளர் தேவ. பொழிலன் வலியுறுத்தியிருக்கிறார்.
வி.சி.க முதன்மை செயலாளர் தேவ. பொழிலன் தனது அறிக்கையில், "புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கும் செவிலியர் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதல்வர் குறித்து ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவலை சிலர் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். செவிலியர் கல்லூரி மாணவர்கள் கடந்த ஆண்டு கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்ற போது மாணவர்களிடம் வசூலித்த பணத்தில் பத்தாயிரம் ரூபாய் குறைந்துள்ளது.
இது தொடர்பாக மாணவர் சஞ்சய் குமார் பணம் வசூல் செய்த ஸ்ரீராம் மற்றும் சுற்றுலா பொறுப்பாளர் பேராசிரியர் வசந்தி ஆகியோரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த பேராசிரியர் வசந்தி மாணவர் சஞ்சய் குமாரை நீதான் திருடன் என்று குற்றம் சுமத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஸ்ரீராம், விக்னேஸ்வரன் மற்றும் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி தங்களுக்கு இடையே கல்லூரியில் தாக்கிக் கொண்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள் ஜூலை 25ம் தேதி விசாரணை நடத்தியுள்ளனர்.விசாரணையின் இறுதியில் தாக்கிக் கொள்வது போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் இனி ஈடுபட மாட்டோம் என்றும் மாணவர்கள் உறுதியளித்ததாலும் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் இரு குடும்பத்தாரும் பிரச்சனையை சமாதானமாக பேசி முடித்துக் கொண்டனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இயக்குனர் உதயசங்கர் மாணவர் ஸ்ரீராம் மூலம் உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுகளைக் கூறி PCR செல் மற்றும் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தில் புகார் அளிக்க வைத்துள்ளார். மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையை சாதி பிரச்சினையாக மடைமாற்றி தனக்கு வேண்டாத பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முதல்வர் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் இயக்குனர் உதயசங்கர் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் புகார் தொடர்பான விசாரணை நிறைவுறும் முன்னரே ஒரு மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, உதவி பேராசிரியை பணியில் இருந்து திரும்பப் பெறப்பட்டு இருப்பது ஜனநாயக விரோதமானது. புதுச்சேரி மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்காக அரசு சார்பில் நான்கு செவிலியர் கல்லூரிகள்,மூன்று செவிலியர் பள்ளிகள் தொடங்க நிர்வாக ரீதியாக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் என்பதால் செவிலியர் கல்லூரி முதல்வர் தமிழா தமிழ்வாணன் அவர்கள் தனியார் செவிலியர் கல்லூரிகளால் குறி வைக்கப்பட்டுள்ளார். தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில் இயக்குனர் உதயசங்கர் தலித் மாணவர் ஸ்ரீராமை பயன்படுத்தி தலித் சமூகத்தை சார்ந்த செவிலியர் கல்லூரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் மற்றும் பேராசிரியர்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி தலித்துகளை தூண்டிவிட்டு பொய் புகார் அளிக்க வைப்பதும் குற்றமாகும்.
எனவே மாணவர் சஞ்சய் குமார் மற்றும் உதவி பேராசிரியை பிரவீனா மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகின்றோம். மாணவர் மற்றும் பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை திரும்ப பெறவில்லை எனில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி தலித்துகளையே பழி தீர்க்க முடியும் என்ற தவறான உதாரணத்திற்கு இது வழி வகுத்து விடும்.
எனவே செவிலியர் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள்,முதல்வர் ஆகியோரை போலியான குற்றப்புகாரில் சிக்கவைத்து கல்லூரியின் புகழை கெடுக்கும் உள்நோக்கத்துடனும் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக இயக்குனர் உதயசங்கர் செயல்படுகிறார் என்ற சந்தேகம் எழுகிறது.எனவே இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி இயக்குனர் உதயசங்கர் அவர்களின் மாணவர் விரோத, ஊழியர் விரோத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகின்றோம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.