/indian-express-tamil/media/media_files/2025/08/18/puducherry-tb-elimination-2025-08-18-16-37-18.jpg)
புதுச்சேரியில் இனி வீடு தேடிவரும் காசநோய் பரிசோதனை: ரூ.1.40 கோடியில் நவீன இயந்திரங்கள்!
புதுச்சேரியில் காசநோய் பாதிப்பைக் குறைக்கும் முயற்சியாக, சுகாதாரத் துறைக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்களையும், கையடக்க எக்ஸ்ரே கருவிகளையும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார். கோரிமேடுவில் உள்ள அரசு மார்பு நோய்கள் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த நவீன வசதிகளை அவர் திறந்து வைத்தார்.
இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 195 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில், புதுச்சேரியில் ஒரு லட்சம் பேருக்கு 98 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். காசநோய் பாதிப்பை 59% குறைத்ததற்காக மத்திய அரசிடம் புதுச்சேரி வெள்ளிப் பதக்கம் பெற்றிருப்பதும், 8 கிராமங்களை காசநோய் இல்லாத கிராமங்களாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே மத்திய அரசின் இலக்காகும். இந்த இலக்கை அடைய, புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, இன்று திறக்கப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு காசநோயை எளிதாகவும் விரைவாகவும் கண்டறிய உதவும்.
மேலும், புதிதாக வழங்கப்பட்ட 4 கையடக்க எக்ஸ்ரே இயந்திரங்கள், வீடுகளுக்குச் சென்று பாதிப்புக்குள்ளான நோயாளிகளைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும். இது, நோய் கண்டறிதலை விரைவுபடுத்தி, புதுச்சேரியை காசநோய் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை அடைய பெரிதும் உதவும்.
இந்த நிகழ்ச்சியில் அரசு கொறடா வி.அருள்முருகன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.டி.இந்திரா நகர், சுகாதாரத் துறை செயலாளர் ஜெயந்த குமார் ரே, சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.செவ்வேல், மிஷன் இயக்குநர் டாக்டர் எஸ்.கோவிந்தராஜன் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சி.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.