/indian-express-tamil/media/media_files/2025/03/21/jKjD9zvIN7PxIWpkBPoB.jpg)
ஆட்சியாளர்களின் துணையோடு காரைக்கால் துறைமுகத்தை செயல்படுத்துவதில் நமக்கு சேர வேண்டிய நியாயமான ராயல்டி சலுகை கட்டணமும், நம்முடைய இடத்திற்கான வாடகை தொகையும் பெற புது ஒப்பந்தத்தை அரசு உடனடியாக போட வேண்டும். என அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று (21.03.2025) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரியில் மதுபான கொள்முதல், மதுபான விநியோகம் ஆகிய இவ்விரண்டையும் அரசே செய்தால் ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் வரும். ஆனால் கடந்த கால திமுக காங்கிரஸ் கூட்டணி அரசாக இருந்தாலும் சரி தற்போதைய ஆளும் அரசாக இருந்தாலும் மதுபான கொள்கை முடிவில் சரியான முடிவு எடுக்காமல் சுயநலத்துடன் செயல்படுவதால் அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் கோடி ரூபாயய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இது ஆளும் அரசியல்வாதிகளின் திட்டமிட்ட முறைகேடாகும்.
அந்த வகையில் காரைக்கால் பிராந்தியத்தில் அரசின் இடத்தில் செயல்படும் தனியார் துறைமுகத்தில் அரசின் இடத்திற்கான ஆண்டு வாடகையும், துறைமுகத்தின் செயல்பாட்டில் சலுகை கட்டணமும் (Conceshion Fees) மிகக் குறைந்த அளவில் வசூல் செய்வதால் அரசுக்கு வர வேண்டிய சுமார் ரூ.50 கோடி மாத வருமானம் ஆண்டிற்கு சுமார் ரூ.600 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது.
காரைக்காலில் 598 ஏக்கர் அரசு நிலத்தில் 2009-ம் ஆண்டு மார்க் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் கடற்கரையில் துறைமுகம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
அப்போது ஒரு ஏக்கர் நிலத்திற்கு வாடகையாக ஓர் ஆண்டிற்கு சுமார் ரூ.9000-ம் மாதத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.750 என முடிவு செய்தனர்.
அதே போன்று அந்த துறைமுகத்தின் மூலம் ராயல்ட்டிக்கு பதிலாக சலுகை கட்டணமாக (Conceshion Fees) மொத்த வருமானத்தில் 2.6 சதவீதம் நிறுவனம் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
சுமார் 598 ஏக்கர் நிலத்திற்கும் ஆண்டிற்கு ரூ.52 லட்சம் மட்டும் இடத்தின் வாடகையாக அரசுக்கு செலுத்துகிறது.
அதே போன்று சலுகை கட்டணம் ராயல்ட்டியாக மொத்த வருமானத்தில் 2.6 சதவீதம் மட்டும் அந்த நிறுவனம் ஆண்டுக்கு சுமார் ரூ.11 கோடி என இதுவரை ரூ.165 கோடி மட்டுமே நம்முடைய புதுச்சேரி அரசுக்கு செலுத்துகிறது.
இந்த தனியார் துறைமுகத்தின் உரிமையாளர் துறைமுகத்தின் வருவாயை பல்வேறு வேறு திட்ட பணிகளில் மடைமாற்றம் செய்ததால் வங்கிகள் மூலம் துறைமுகத்திற்காக வாங்கப்பட்ட கடனை அடைக்க முடியாமல் நிறுவனம் துறைமுகத்தை செயற்கையாக நஷ்டத்திற்கு கொண்டு சென்றது.
இது சம்பந்தமாக டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (National Company Law Tribunal) தலையிட்டு இந்த நிறுவனத்தை அதானி குரூப்பிடம் ஒப்படைத்தது.
பழைய உரிமையாளர்களிடம் இருந்து புதியதாக விலைக்கு வேறு ஒருவரால் துறைமுகம் வாங்கப்பட்ட பிறகு அந்த புதிய உரிமையாளரிடம் புதியதாக அரசு தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். இந்த துறைமுகம் 2009-ம் ஆண்டில் இருந்து 20024-ம் ஆண்டு வரை சுமார் 15 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு சர்வீஸ் வரியாக ரூ.197.12 கோடியும், ஜி.எஸ்.டியாக ரூ.303.38 கோடியும், சுங்க வரியாக ரூ.5748.50 கோடியும் என இதுவரை ரூ.6250 கோடி மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது.
இது ஆண்டிற்கு தோராயமாக சுமார் ரூ.500 கோடி அளவில் மத்திய அரசு வரியாக மட்டும் பெற்று வருகிறது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியை மத்திய நிதிக்குழுவில் மத்தியில் ஆளும் பாஜக இதுவரை இணைக்காததால் ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு மேல் மத்திய அரசு இந்த துறைமுகத்தின் மூலம் பெறும் வரியில் நாம் நியாயமாக பெற வேண்டிய 42 சதவீதமான பங்கில் நமக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட அளிப்பதில்லை.
மேலும், இந்த துறைமுகம் இதுவரை ரயில் மூலம் செய்யப்படும் போக்குவரத்து கட்டணமாக மட்டும் சுமார் ரூ.4155 கோடி ரயில்வே துறைக்கு செலுத்தியுள்ளது.
நம்முடைய மண்ணில் எங்கிருந்தோ வந்த நபர்கள் ஆட்சியாளர்களின் துணையோடு துறைமுகத்தை செயல்படுத்துவதில் நமக்கு சேர வேண்டிய நியாயமான ராயல்டி சலுகை கட்டணமும், நம்முடைய இடத்திற்கான வாடகை தொகையும் பெற புது ஒப்பந்தத்தை அரசு உடனடியாக போட வேண்டும்.
இது சம்பந்தமாக முதலமைச்சர் அவர்களும், துணைநிலை ஆளுநர் அவர்களும், நம் மாநிலத்தின் தலைமை செயலாளர் அவர்களும் சரியான முடிவினை எடுக்க வேண்டும்.
இக்கால சூழ்நிலைக்கு ஏற்ப புதிய ஒப்பந்தம் போடப்பட்டால் வாடகை வரி, சலுகை கட்டணம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே நமக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடி அளவிற்கு காரைக்கால் துறைமுகத்திற்கு நேரடி வருவாயும், மத்திய அரசை இது சம்பந்தமாக நேரடியாக சென்று வலியுறுத்தினால் மத்திய அரசின் வரியில் இருந்து ஒரு கணிசமான தொகையும் நமக்கு கிடைக்கும். ஆனால் ஆளும் அரசு அரசின் வருவாய் பெருக்கத்திற்கு எந்தவிதமான முடிவும் எடுக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக தெரிகிறது. இது சம்பந்தமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்கு உரிய புள்ளி விவரங்களோடு கொண்டு செல்லாதது வருத்தமளிக்க கூடிய விஷயமாகும்” என்று அன்பழகன் கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது, மாநில இணைச் செயலாளர் திருநாவுக்கரசு,மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப்பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.