மாநில நிர்வாகத்தில் தலையிடுவதாக கிரண்பேடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, முதல்வர் நாராயணசாமியுடன் காங்கிரஸ் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மக்களுக்கு இலவச அரிசி, பொங்கல் பரிசு பொருட்கள் உள்ளிட்ட நலத் திட்டங்களை வழங்குவதற்கு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாக முன்னர் தெரிவித்திருந்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
இந்நிலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதை படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றிய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதனால் புதுச்சேரியில் கடந்த 11-ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வருவதாகவும், மீறுபவர்கள் அபராதம் கட்டுவதோடு, அவர்களின் லைசென்ஸும் பறிமுதல் செய்யப்படும் என டி.ஜி.பி சுந்தரி நந்தா உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகன எண்களைக் குறித்து நீதிமன்றம் மூலம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார் கிரண் பேடி.
அதன்படி 11, 12-ம் தேதிகளில் மட்டும் சுமார் 30000 வாகன எண்கள் குறிக்கப்பட்டு, அவர்களுக்கு சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறது காவல்துறை. இந்த செய்தியைக் கேள்விப் பட்ட பொது மக்களும், பிற கட்சினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள மாஹே சென்றிருந்த முதல்வர் நாராயணசாமி நேற்று காலை புதுவை திரும்பினார். தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அவர், கறுப்பு உடை அணிந்து கவர்னர் மாளிகையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மற்றவர்கள் தோளில் கறுப்பு துண்டு அணிந்திருந்தனர். பின்னர் அவர்களின் போராட்டத்தில் தி.மு.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்துக் கொண்டனர்.
இந்த விஷயம் புதுச்சேரியில் மிகுந்த பரபரப்பை கிளப்பியது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பிறகு நேற்று இரவு ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள்ளேயே உறங்க ஆரம்பித்து விட்டார் நாராயணசாமி.
இந்நிலையில் தர்ணாவின் இரண்டாம் நாளான இன்று சென்னை மற்றும் நெய்வேலியிலிருந்து அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்பு படை புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளது. தலைமைச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று உள்துறை அமைச்சகம் இந்தப் படைகளை அங்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.