புல்வாமா தாக்குதலில் அடுத்தக்கட்ட நடிவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி திரும்பியதும் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது
டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகக் கட்டடத்தில் இன்று காலை 11 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. காஷ்மீர் தாக்குதல் குறித்த தகவல்களை அனைத்துக் கட்சியினருடன் பகிர்ந்துக் கொள்வதுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சரத்பவார், டி.ராஜா, கனிமொழி, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்கட்சிகள் பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மத்திய அரசுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க அரசின் பக்கம் துணை நிற்போம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.
மேலும் புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.