அதிகாலை 3 மணியளவில் காவல்நிலையம் வந்த எம்.எல்.ஏ., 8 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட ரத்த ஆல்கஹால் பரிசோதனை மற்றும் சிறார் நீதி வாரியத்தின் மெத்தன நடவடிக்கை - புனே போர்ஷே கார் விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தது தேசிய கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இங்கு குற்றம் சாட்டப்பட்ட சிறாரை காப்பாற்றும் முயற்சிகள் நடந்ததா என அடுக்கடுக்கான கேள்விகளும் சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் புனேவின் கல்யாணி நகர் பகுதியில் பணி முடிந்து பொறியாளர்களான அனீஷ் அவதியா மற்றும் அஷ்வானி கோஷ்தா ஆகியோர், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், அதிவேகமாக வந்த போர்ஷை கார் அவர்கள் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த போர்ஷை காரை 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்தது தெரிய வந்தது. விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை புனேவில் ஒரு பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார்.
சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள், உள்ளூர் எம்.எல்.ஏ சுனில் டிங்ரேக்கு விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. மேலும் சிறுவன் அழைத்துச் செல்லப்பட்ட காவல் நிலையத்திற்கு அவர் சென்றார். இது காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல என்றும் டிங்ரே கூறினார்.
“எனது அழைப்பு பதிவுகளை நீங்கள் சரிபார்க்கலாம்... குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை பலவீனப்படுத்த நான் எந்த ஒரு போலீஸ் அதிகாரி அல்லது அரசியல்வாதிக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனது அரசியல் எதிரிகள் என்னைக் களங்கப்படுத்துவதற்காக அவதூறுகளைப் பரப்ப முயற்சிக்கின்றனர்” என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை, அவரது தனிப்பட்ட உதவியாளருக்கும் அவருக்கும் அதிகாலை 3.20 மணியளவில் சிறுவனின் தந்தையிடமிருந்து அழைப்பு வந்ததாக டிங்ரே கூறினார். “அவரது மகன் விபத்தில் சிக்கியதாகவும், பொது மக்கள் அவரது மகனை அடிப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார்... நான் அந்த இடத்திற்கு விரைந்தேன், ஆனால் சிறுவனை அதற்குள் எரவாடா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். நான் அங்கு சென்றேன், ஆனால் இன்ஸ்பெக்டர் அங்கு இல்லை. ஒரு மணி நேரத்திற்கும் பின் அவர் அங்கு வந்தார். வெளியில் கூட்டம் அதிகமாக இருந்தது,'' என்றார்.
சிறுவன் விபத்தை ஏற்படுத்தியதில் 2 பேர் உயிரிழந்தாக இன்ஸ்பெக்டர் தன்னிடம் கூறியதாக டிங்ரே கூறினார். “வழக்கின் தீவிரத்தை அவர் என்னிடம் கூறிய பிறகு, நான் அவரிடம் சட்டப்படி செயல்படச் சொன்னேன். வெளியே வந்ததும் சிறுவனின் தந்தையை சந்தித்து விபத்து நடந்ததைச் சொன்னேன். சிறுவனின் தந்தையும் காவல்நிலையத்திற்கு வந்த பிறகு மரணம் குறித்து அறிந்தார். நான் காலை 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டேன்,'' என்றார்.
சிறுவனுக்கு பீட்சா மற்றும் தண்ணீரை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்: "நான் சிறுவனைச் சந்திக்கவில்லை. அவரிடம் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை... அப்படி இருக்க நான் எப்படி அவருக்கு பீட்சா வழங்கி இருக்க முடியும்?" என்றார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/pune/pune-porsche-crash-mlas-late-night-visit-delay-in-alcohol-test-raise-questions-9346161/
காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகு, அந்த சிறுவனின் தந்தையை அழைத்ததாகவும், மாலையில் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து வழக்கு பற்றிய மேலும் தகவலைப் பெற்றதாகவும் டிங்ரே கூறினார். "அந்த நேரத்தில், வழக்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் நான் செல்வாக்கு செலுத்துவது பற்றிய கேள்வி எங்கே?... அப்படியொரு எண்ணம் எனக்கு இருந்திருந்தால், நான் சிறுவனைப் பாதுகாத்து, அவருடைய பெயரை வெளியே கூட வர விடாமல் செய்திருக்க முடியும்,” என்றார்.
இதற்கிடையில் புனே காவல்துறை சிறுவனின் மீது watertight வழக்கு பதிவு செய்யாமல் வேண்டுமென்றே தவறிவிட்டது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் சிறுவனுக்கு ஜாமின் கிடைத்தது. சிறுவன் 15 நாட்கள் சமூகப் பணி செய்ய வேண்டும், கட்டுரை எழுத வேண்டும் போன்ற நிபந்தனைகளில் ஜாமீனில் வெளிவர உதவியது.
அதிகாலை 2.30 மணியளவில் விபத்து நடந்தபோது, சிறுவன் அங்கிருந்தவர்களால் உடனடியாக பிடிபட்டார், அதன் பின்னர் போலீசார் காலை 11 மணிக்கு - 8 மணி நேரத்திற்குப் பிறகு இரத்த மாதிரி பரிசோதனையை நடத்தினர்.
புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமாரை தொடர்பு கொண்டபோது, “விபத்திற்குப் பிறகு, போலீஸ் குழு நிலைமையையும் கூட்டத்தையும் கையாள்வதில் மும்முரமாக இருந்தது. ஆம், இருப்பினும் ரத்த மாதிரி பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. காலை 9 மணியளவில் சிறுவன் சசூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, 11 மணியளவில் மாதிரி சேகரிக்கப்பட்டது. தாமதத்திற்கான காரணத்தை கண்டறிய முயற்சித்து வருகிறோம்” என்றார்.
BG Kolse-Patil, ஓய்வுபெற்ற மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், ரத்த மாதிரிப் பரிசோதனையை நடத்துவதில் தாமதம் என்பது "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்குவதாகும்" என்று கூறினார். "8 மணி நேரத்தில், ஆல்கஹால் சிறுநீர் வழியாக சென்றுவிடும் மற்றும் அதன் பின்னர் பரிசோதனை செய்வது நெகட்டிவ் ஆக தான் இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படும்," என்று அவர் கூறினார்.
விபத்து நடந்த உடனேயே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஐபிசியின் பிரிவு 304 (ஏ) (அலட்சியத்தால் மரணம்) பதிவு செய்யப்பட்டது என்றும் காவல்துறைத் தலைவர் கூறினார். “பின்னர், விபத்தின் தீவிரம் குறித்த முழுத் தகவலையும் சேகரித்த பிறகு, நாங்கள் எஃப்ஐஆரை மேம்படுத்தி, பிரிவு 304 கீழ் வழக்குப்பதிவு செய்தோம். ஞாயிற்றுக்கிழமை ஜே.ஜே.பி.க்கு மாற்றப்பட்ட ரிமாண்ட் விண்ணப்பத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது, ”என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமையும், காவல்துறை அழுத்தத்தின் கீழ் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை குமார் மறுத்தார். “எந்தவொரு அழுத்தம் என்ற கேள்விக்கும் இங்கு இடமில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நாங்கள் தாக்கல் செய்யக்கூடிய மிகக் கடுமையான குற்றத்தைப் பதிவு செய்துள்ளோம் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.