பண தகராறு காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 வயதான பொறியாளரை புனேவில் ஒரு ஹோட்டலில் கடத்தி வைக்கப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் புனே நகர குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை மீட்டனர்.
பொறியாளருக்கு சமீபத்தில் ஒரு நிறுவனத்திடமிருந்து வேலைக்கான அழைப்பு வந்ததாகவும், அதற்காக ஜனவரி 6 ஆம் தேதி மும்பைக்குச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், அங்கு அவர் ஒரு நபரால் தாக்கப்பட்டதாகவும் புனே - சோலாப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஹடப்சரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட்டு அங்கு அவர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுமார் 3,000 அமெரிக்க டாலர்கள் மற்றும் டிடி நாணயத்தை வாங்குவது தொடர்பாக நிறுவனத்தின் மேலாளருடன் ஏற்பட்ட நிதி தகராறைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்றது.
கடந்த 9 ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள குடும்பத்தினர் ஒருவரை ஹோட்டலில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடத்தப்பட்ட என்ஜினீயர் பேசியுள்ளார். தான் கடத்தப்பட்டு புனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குடும்ப உறுப்பினரிடம் கூறினார்.
பின்னர் குடும்பத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து இங்கிருந்து புனே நகர போலீசாருக்கு அனுப்பப்பட்டது.
துணை போலீஸ் கமிஷனர் (குற்றப்பிரிவு) நிகில் பிங்கிளின் அறிவுறுத்தலின்படி, இன்ஸ்பெக்டர்கள் விஜய் கும்பர், சந்தீபன் பவார், வாஹித் பதான், யுவராஜ் ஹண்டே மற்றும் உதவி ஆய்வாளர் சிபி பெராட் தலைமையிலான குற்றப்பிரிவு குழுக்கள் கடுமையான தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கின.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
Tamil Nadu techie rescued from hotel confinement, 6 held
புர்சுங்கி, ஷெவல்வாடி, குஞ்சிர்வாடி ஆகிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தி, இறுதியாக ஷிக்ராபூர் - அஹில்யாநகர் சாலையில் ஒரு இடத்திலிருந்து வெள்ளிக்கிழமை(ஜன 10) அவரை மீட்டனர்.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது மெஹர்பன் (27), அர்ஜுன் குமார் (28), அஹில்யாநகரைச் சேர்ந்த தேவேந்திர அல்பர் (25), மும்பையைச் சேர்ந்த அங்கித் அடகலே (25), உத்தரகண்டைச் சேர்ந்த பிரியங்க் ராணா (33) மற்றும் புனே மாவட்டத்தின் ஷிக்ராபூரைச் சேர்ந்த அவினாஷ் கதம் (43) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவுகள் 127 (7), 115 (2), 351 (2), 3 (5) ஆகியவற்றின் படி அவர்களுக்கு எதிராக ஹடப்சர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.