மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ராகுல் காந்தி கூட்ட நெரிசலில் எவ்வித பாதுகாப்பும் இன்றி 30 நிமிடங்களுக்கு மேல் இருந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை காலமானார். மறுநாள் (ஆக.8) கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பல்வேறு தேசிய அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ராகுல் காந்திக்கு எஸ்பிஜி எனப்படும் பிரதமருக்கு அளிக்கப்படும் உயரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இப்படிப்பட்ட பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் எந்நேரமும் உண்டு. பிரதமர் வரும்வரை கடும் போலீஸ் பாதுகாப்பு இருந்தது. அவர் சென்றவுடன், அதே அளவு பாதுகாப்பு உள்ள ராகுல் காந்தி வந்தபோது அவருக்கு பாதுகாப்பு அளிப்பதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை, அவர் எவ்வித பாதுகாப்புமின்றி அங்கு இருந்தார்.
பின்னர் கூட்டத்திலிருந்து மீட்கப்பட்டு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம், பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய உள்துறை அளவில் பிரச்சனை வெடித்துள்ளது. மத்திய உளவு அமைப்பான ஐபி இது குறித்து அறிக்கை அனுப்பியுள்ளது. ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பிரிவும் அறிக்கையை அனுப்பிவிட்டது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறைபாடும், கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்தது, 20 பேர் வரை காயமடைந்தது குறித்தும் தலைமைச்செயலாளர் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறப்பு பாதுகாப்பு பிரிவின் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு உட்பட்டுச் செல்ல வேண்டிய ராகுல் காந்தியை, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிற வகையில் அலட்சியப்போக்குடன் ராஜாஜி அரங்கில் அழைத்துச்சென்றது பற்றி சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காவல்துறையினர் குண்டும் குழியுமாக, குப்பை மேடாக, சேறும் சகதியுமாக இருந்த பகுதிகளில் இறக்கி ராகுல் காந்தியை அழைத்துச் சென்று உரிய பாதுகாப்பு தராததையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது" என்று அந்த அறிக்கையில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், இந்த புகாரை சென்னை மாநகர காவல்துறையினர் மறுத்துள்ளது. "ராகுல் காந்தி வருகை மாற்றப்பட்ட தகவல்களை சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. ராஜாஜி ஹாலுக்கு அவர் பிற்பகல் 3:15 மணிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்றப்படி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தோம். ஆனால் எந்தவித தகவல்களையும் தெரிவிக்காமல் முன்கூட்டியே பிற்பகல் 2.05 மணிக்கு அவர் வந்துள்ளார். ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்க உதவி ஆணையர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவருக்காக முழு அளவில் நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தோம். அவருக்கென பிரத்யேகமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன" என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.