சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பற்ற அடையாளத்துக்கு எதிரானது என்று கூறிய, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், 1930-களில் அடால்ஃப் ஹிட்லர் ஆட்சியில் இருந்தபோது ஜெர்மனியில் நிகழ்ந்த சம்பவங்களுடன் இப்போது வெளிவரும் நிகழ்வுகள் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன என்று வெள்ளிக்கிழமை கூறினார்.
விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
“நீங்கள் இந்த நாட்டின் மதச்சார்பற்ற அடையாளத்தை மாற்ற விரும்புகிறீர்கள். இப்போது என்ன நடக்கிறது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாங்கள் அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்ததுகூட இல்லை. நாம் அரசியலுக்காக மட்டுமே சகோதரத்துவத்தை முறித்துக் கொள்ள விரும்புகிறோம்” என்று சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் குறித்து மாநில சட்டமன்றத்தில் நடந்த கலந்துரையாடலில் அமரிந்தர் சிங் கூறினார். மேலும், “வரலாற்றிலிருந்து எந்த பாடங்களும் சுத்தமாக கற்றுக்கொள்ளப்படவில்லை” என்று அவர் கூறினார்.
பஞ்சாப் மாநில சட்டமன்றம், குரல் வாக்கெடுப்பு மூலம், சர்ச்சைக்குரிய சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது. மேலும், சிஏஏவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றிய சிறிது நேரத்தில், முதல்வர் அமரீந்தர் சிங் தனது அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் என்று கூறினார்.
“கேரளாவைப் போலவே, எங்கள் அரசாங்கமும் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகும்” என்று அமரிந்தர் சிங் மாநில சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
இதன் மூலம், காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப், கேரளாவுக்குப் பிறகு சிஏஏ-வை ரத்து செய்யக் கோரி கோரி சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தை அணுகும் இரண்டாவது மாநிலமாக மாறியுள்ளது.
குடியுரிமை வழங்குவதில் மதத்தின் அடிப்படையில் எந்தவொரு பாகுபாட்டையும் தவிர்க்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்வதோடு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டு (என்.பி.ஆர்) பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
இது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஒரு முன்னோடி என்றும், இந்தியாவின் குடியுரிமையிலிருந்து ஒரு பகுதியினரை பறிக்கவும், சிஏஏ-வை செயல்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற அச்சம் நிலவுகிறது.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உணர்ச்சிபூர்வமாக கூறுகையில், “ஏழைகள் எங்கு செல்வார்கள்? எங்கிருந்து அவர்கள் பிறப்புச் சான்றிதழ்களை வாங்குவார்கள்… இது ஒரு பெரிய சோகம். என் வாழ்நாளில் இதைச் சொல்வதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்... இது என் நாட்டிற்கு நடக்கும் போது நான் இங்கே இல்லை என்று விரும்புகிறேன். அரசியலுக்காக சகோதரத்துவம் உடைந்து போகும் சூழ்நிலையில் நாம் எங்கே இருக்கப் போகிறோம்” என்று கூறினார்.
இது 1930-களில் ஹிட்லரின் ஜெர்மனியில் நடைபெற்ற இன அழிப்பு என்று அவர் கூறினார். இப்போது இந்தியாவில் இதே நிகழ்வுகள் வெளிவருகின்றன என்றும் கூறினார்.
“ஜெர்மானியர்கள் அப்போது பேசவில்லை. அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். ஆனால், நாம் இப்போது பேச வேண்டும். அதனால், நாம் பின்னர் வருத்தப்படக்கூடாது” என்று அவர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சியை, குறிப்பாக அகாலிதளத்தினர் சிஏஏ-வின் ஆபத்துகளை புரிந்துகொள்ள ஹிட்லரின் 'மெய்ன் காம்ப்' புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த ஷிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி), பஞ்சாப் சட்டமன்றத்தில் மாநில அரசின் தீர்மானத்தை ஆதரித்தது. எஸ்ஏடி தலைவர் பிக்ரம் மஜிதி, “மக்கள் வரிசையில் நின்று அவர்கள் எங்கு பிறந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், இது போன்ற எந்தவொரு சட்டத்திற்கும் நாங்கள் எதிரானவர்கள்” என்று கூறினார்.
பாகிஸ்தானைவிட அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற ஒரு சோகம் நிகழும் என்று தான் நினைத்துப் பார்த்ததில்லை என்றும் முதல்வர் அமரிந்தர் கூறினார்.
“நீங்கள் குடிமக்கள் அல்லாதவர்கள் என்று முத்திரை குத்தும் அந்த மக்கள் அனைவரும் எங்கே போவார்கள்? அசாமில் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட 18 லட்சம் பேர்களை மற்ற நாடுகள் ஏற்க மறுத்தால் அவர்கள் எங்கே போவார்கள்? இதைப் பற்றி யாராவது யோசித்திருக்கிறார்களா? சட்டவிரோத மக்கள் என்று அழைக்கப்படுபவர்களுடன் என்ன செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட யோசித்திருக்கிறாரா? ஏழை மக்கள் பிறப்புச் சான்றிதழ்களை எங்கிருந்து பெறுவார்கள்? ” என்று முதல்வர் அமரிந்தர் சிங் கேள்வி எழுப்பினார்.
மேலும், “நாம் அனைவரும் நம்முடைய சொந்த நலனுக்காக மதச்சார்பற்ற இந்தியாவின் குடிமக்களாக ஒன்றாக வாழ வேண்டும்” என்று அவர் கூறினார்.
“இந்த நாட்டில் அனைத்து மத மக்களும் இணக்கமாக வாழ்ந்து வந்தனர். முஸ்லிம்கள் இந்த நாட்டிற்காக தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர்” என்று அமரிந்தர் சிங் கூறினார். 1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, இந்திய ராணுவ வீரர் அப்துல் ஹமீத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, பரம் வீர் சக்ராவை மரணத்திற்குப் பின் அவரது செயல்களுக்காகப் பெற்றார் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.