பஞ்சாப்பில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருட்களின் உபயோகம் அதிகரித்து வந்துள்ளது. இதனை தடுக்க பஞ்சாப் அரசாங்கம் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அளவுக்கு அதிகமாக போதைப் பொருட்கள் எடுத்துக் கொண்ட காரணத்தால் தொடர் மரணங்கள் ஏற்பட்டன. இதனை அடுத்து, பஞ்சாப் அரசாங்கம் மீண்டும் போதைப் பொருட்களின் உபயோகத்தினை முற்றிலும் கட்டுப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் “இனி வருடந்தோறும் அரசு ஊழியர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்படும். அரசு வேலைகளில் புதிதாக இணைபவர்களுக்கும், பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்படுபவர்களுக்கும் இந்த சோதனை நடத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் காவல் துறையில் ஐஜி முதற்கொண்டு டிஎஸ்பி வரை அனைவருக்கும் இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். பஞ்சாப் காவல் துறையினர் திறம்பட செயல்படாததின் விளைவே இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று பஞ்சாப் அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதைப் பற்றி பஞ்சாப் மாநில அமைச்சர் த்ரிப்த் சிங் பஜ்வா குறிப்பிடுகையில் “காவல் துறையினரில் பலரே போதை வஸ்துகளுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.
முதல்வர் அம்ரிந்தர் சிங்கின் அறிவிப்பிற்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் த்ரிப்த் சிங், “வியாழன்று காலை மொஹாலியில் இருக்கும் தலைமை மருத்துவ அலுவலகத்திற்கு சென்று என்னுடைய ரத்த மாதிரியை பரிசோதனை செய்து அதன் முடிவுகளை அளிக்க உள்ளேன்” என்று கூறினார். “ இதை நான் எனக்காகவே செய்கிறேன். என்னுடைய கட்சி உறுப்பினர்களையோ, என்னுடன் வேலை செய்பவர்களையோ இந்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்று நான் வற்புறுத்தமாட்டேன்” என்றும் தெரிவித்தார்.
இந்த திட்டம் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அமரிந்தர் சிங் எழுதிய கடிதம் ஒன்றில் “இந்திய போதைப் பொருள் தடுப்புச் சட்டம் 1985த்தின் படி, போதைப் பொருட்களை இரண்டாம் முறையாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாம். இதனால் பஞ்சாப் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் போதைப் பொருட்களின் உபயோகத்தினை தடுக்கலாம்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.