பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குடிபோதையில் இருந்ததால், பிராங்பேர்ட் விமான நிலையத்தில், டெல்லி செல்லும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். ஆனால், ஆளும் ஆம் ஆத்மி கட்சி இது ஆதாரமற்றது என மறுத்துள்ளது. இதனிடையே, லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது, பிராங்பேர்ட்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட இருந்த அவர்களின் விமானம், தாமதம் மற்றும் விமான மாற்றம் காரணமாக’ தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டதாக அது தெரிவித்தது.
பகவந்த் மான் மீது, முதலில் தாக்குதலை நடத்தியவர் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல்.
பஞ்சாப் முதல்வர் நடக்க முடியாத அளவுக்கு குடிபோதையில் இருந்ததால் லுஃப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கப்பட்டதாக சக பயணிகள் கூறியதாக, ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் விமானம் 4 மணி நேரம் தாமதமானது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டை அவர் தவறவிட்டார். இந்த அறிக்கைகள் உலகெங்கிலும் உள்ள பஞ்சாபியர்களை வெட்கப்படுத்தியது மற்றும் அவமானப்படுத்தியது, ”என்று பாதல் ஒரு ட்வீட்டில் கூறினார்.
தங்கள் முதல்வர் சம்பந்தப்பட்ட இந்த அறிக்கைகள் குறித்து மாநில அரசு அமைதியாக இருப்பதாக பாதல், மற்றொரு ட்வீட்டில் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் குறிவைத்து, அவர் இந்த பிரச்சினையில் முடிவை கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இது பஞ்சாபி மற்றும் தேசிய பெருமையை உள்ளடக்கியது என்பதால், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதல் கூறினார்.
பஞ்சாப் விதான் சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா, இது குறித்து விசாரணை நடத்தக் கோரி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
சனிக்கிழமையன்று பிராங்பேர்ட் விமான நிலையத்தில் லுஃப்தான்சா விமானத்தில் இருந்து பகவந்த் மான் தனது பரிவாரங்களுடன் இறக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.
அவர் குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டு, பயணம் செய்ய தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டார். அது உண்மையாக இருந்தால், அது நிச்சயமாக பகவந்த் மான் வகிக்கும் அலுவலகத்தின் மோசமான பிரதிபலிப்பாகும். எனவே, இந்தச் செய்தியை லுஃப்தான்சா விமான நிறுவனத்திடம் இருந்து சரிபார்ப்பதற்கான விசாரணையைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் இது ஒரு தனிநபரை மட்டுமல்ல, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலகத்தையும் உள்ளடக்கியது மற்றும் அத்தகைய நடத்தை நிராகரிக்கப்படத் தகுதியானது, என்று பஜ்வா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஆம் ஆத்மியின் தலைமை செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் காங், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை என்று குறிப்பிட்டார், மேலும் முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் போட்டி கட்சிகள் எதிர்மறையான பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.
குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, போலியானவை, பொய்யானவை” என்று கூறிய காங், மாநிலத்துக்கு முதலீடுகளை வரவழைக்க முதல்வர் கடுமையாக உழைத்து வருவதை ஜீரணிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புகின்றன என்று குற்றம் சாட்டினார்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில்தான் அவர் இந்தியா வரவிருந்தார். இந்த இழிவான குற்றச்சாட்டு எங்கிருந்து வருகிறது? அவரால் எந்த விமானமும் தாமதமாகவில்லை. அவர் ஞாயிற்றுக்கிழமை தான் பயணிக்க இருந்தது, ”என்று காங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில், லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிராங்பர்ட்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட எங்கள் விமானம், சில காரணங்களால் ஏற்கெனவே திட்டமிட்டதை விட தாமதமாகப் புறப்பட்டதாக கூறினார்.
அவரது வருகையையொட்டி சர்ச்சை மூண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் மாநாட்டில் பங்கேற்பதை மான் தவறவிட்டார். தொடர்ந்து அன்று நள்ளிரவில் டெல்லியில் அவர் தரையிறங்கினார். ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பிராங்பேர்ட்டில் இருந்து விமானத்தில் ஏறும் முன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் மாநாட்டில் பகவந்த் மான் உரையாற்றினார்.
இதுகுறித்து பஞ்சாப் மீடியா கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் சந்தர் சுதா டோக்ரா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் அனைத்து குற்றச்சாட்டுகளும் "ஆதாரமற்றவை, எந்த ஆதாரமும் இல்லை. பகவந்த் உடல்நிலை சரியில்லாததால் அவரது விமானம் மீண்டும் திட்டமிடப்பட்டது.
தாழ்மையான பின்னணியில் இருந்து வரும் முதல்வரை சகித்துக் கொள்ள முடியாத இந்த தலைவர்கள் அவர் மீது காட்டு மிராண்டித்தனமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். அரசு இவ்வளவு பாடுபடுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே? அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் வேறு விமானத்தில் சென்றார்” என்று டோக்ரா கூறினார்.
முதல்வர் மீதான "தவறான மற்றும் அற்பமான" குற்றச்சாட்டுகளுக்காக பாதல் மற்றும் பாஜ்வா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென காங் கோரினார். "எதிர்க்கட்சித் தலைவர்கள் உண்மைகளைக் கூட சரிபார்க்காமல் முதல்வர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று காங் மேலும் கூறினார்.
இருப்பினும், அகாலிதள எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல், எங்கள் முதல்வர் இப்போது மிகவும் தலை குனிந்திருக்க வேண்டும், அவருக்கு ஒரு விமான நிறுவனத்திடமிருந்து ஒரு க்ளீன் சிட் தேவைப்படுகிறது.
உண்மையான பிரச்சினை விமானத்தில் தாமதம் அல்ல, ஆனால் அவர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டாரா இல்லையா என்பதுதான். இதுகுறித்து முதல்வர் பேசுவாரா? நமது கேள்வி நமது முதலமைச்சரிடம் தான். நீங்கள் இருந்தீர்களா அல்லது குடிப்பழக்கத்தால் நீங்கள் இறக்கிவிடப்பட வில்லையா, ”என்று அவர் ஒரு ட்வீட்டில் கேட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“