ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா விலகினார். பஞ்சாப் பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் சுரேஷ் ரெய்னாவின் மாமா, மைத்துனர் உயிரிழந்தனர். மேலும் அவரின் அத்தை உள்ளிட்டோர் படு காயம் அடைந்தனர். இதையடுத்தே ரெய்னா நாடு திரும்பும் முடிவுக்கு தள்ளப்பட்டார். ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் பதான்கோட்டில் உள்ள தரியால் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. மூன்று முதல் நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த சதிச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பஞ்சாப் காவல்துறை சந்தேகமடைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஆனால் சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் கொலைக்கான காரணமும், கொலையாளிகளும் கண்டுபிடிக்கவில்லை என்று ரெய்னா வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
மேலும் பஞ்சாப் அரசு விரைந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, தற்போது கொலை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தகவல் வெளியிட்டுள்ளார். இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 11 குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடந்த உடனடியாக, சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார் முதல்வர் அமரீந்தர் சிங்.
பதான்கோட் ரயில் நிலையம் அருகே ஜுகிகளில் மூன்று சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கியிருப்பதாக இந்த விசாரணை குழுவுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைக்க, அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அத்துடன் ஒரு தங்கச் சங்கிலி, ரூ .1530 ரொக்கம், மற்றும் இரண்டு மரக் குச்சிகள் (தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது) ஆகியவை குற்றவாளிகளிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தினர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் சவான், முஹோபத், மற்றும் ஷாருக்கான். இவர்கள் மூவருமே, ராஜஸ்தானில் உள்ள சிராவா மற்றும் பிலானி ஜுகிஸில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் இந்த மூவரும், மற்ற 11 பேருடன் இணைந்து கும்பலாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் உத்தரபிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் இதே போன்ற குற்றங்களைச் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
``சம்பவத்தன்று இரவு 7-8 மணியளவில், இந்தக் கும்பல் 2 அல்லது 3 குழுக்களாக பிரிந்து ரெய்னாவின் மாமா வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வீட்டுக்குள் நுழைய மூன்று, நான்கு வழிகளை தேர்வு செய்து வைத்திருந்த அவர்கள், அதில் தோல்வி ஏற்பட பின்னர், ஏணியைப் பயன்படுத்தி அசோக் குமாரின் வீட்டிற்குள் நுழைந்தனர். மூன்று பேர் பாய்களில் கிடப்பதைக் கண்ட இந்தக் கும்பல் வீட்டின் உள் செல்வதற்கு முன்பு அந்த மூவரையும் தலையில் அடித்து தாக்கி ரொக்கம் மற்றும் தங்க ஆபரணங்களை கைப்பற்றிவிட்டு தப்பியுள்ளனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு மற்றும் மூன்று பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து தப்பி ரயில் நிலையத்தை அடைந்துள்ளனர். பிறகு ரொக்கம் மற்றும் நகைகளை தங்களுக்குள் விநியோகித்த பின் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்" பஞ்சாப் டிஜிபி குப்தா பேசியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil