பெற்றோரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றதால், நிஹாங் சீக்கியர் ஒருவர் தனது 16 வயது மகளைக் கொலை செய்து, உடலை மோட்டார் சைக்கிளில் கட்டி, பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள முச்சல் கிராமத்தின் வழியாக இழுத்துச் சென்ற கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி, தனது வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ரயில்வே கிராசிங்கில் தனது மகளின் சடலத்தை விட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். அவர் இன்னும் தலைமறைவாக உள்ளார், கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த சீக்கியர் தனது குடும்ப உறுப்பினர்களை வீட்டில் அடைத்து வைத்து கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. குற்றவாளியை கைது செய்ய போலீசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர், என்று ஒரு போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
என் பேத்தி புதன்கிழமை வீட்டை விட்டு சென்றதாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாத்தா கூறினார்.
"நாங்கள் அவளைத் தேடினோம், ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வியாழக்கிழமை மதியம் அவள் திரும்பி வந்தபோது, அவளுடைய அப்பா அவளை விசாரித்தார். அவள் எதுவும் சொல்லவில்லை" என்றார்.
போலீஸ் எஃப்ஐஆர் படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகளை கொடூரமாக தாக்கிவிட்டு கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலை செய்துள்ளார்.
அந்த நபருக்கு நான்கு மகள்கள் உட்பட ஐந்து பிள்ளைகள் இருப்பதாக போலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட சிறுமி, அவருக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தை.
சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 12ம் வகுப்பு வரை படித்த சிறுமி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த பல்பீர் சிங் கூறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு முன்கோபக்காரர்.
சின்னசின்ன பிரச்னைகளுக்காக அடிக்கடி தன் குழந்தைகளையும், மனைவியையும் அடிப்பார். சிறுமி காணாமல் போன நிலையில் மீண்டும் திரும்பிய பின்னர் அவர் ஆத்திரம் அடைந்ததாக அவரது மனைவி என்னிடம் கூறினார். அவர் தனது மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார், என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“