பஞ்சாப் மாநிலம், லூதியானா மாநகர உதவி காவல் ஆணையர் அனில் கோஹ்லி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இன்று மரணம் அடைந்தார். இவருடன் அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாப் மாநில காவல்துறையில் லூதியானா மாநகர வடக்கு உதவி காவல் ஆணையர் அனில் கோஹ்லிக்கு கடந்த 13-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை எஸ்.பி.எஸ் மருத்துவமனையில் காலமானார்.இவருடன் சேர்த்து பஞ்சாபில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மூத்த காவல்துறை அதிகாரியான அனில் கோஹ்லி, லூதியான நகரின் மொத்த காய்கறி சந்தையில் கூட்டம் கூடாமல் இருக்க ஒரு நாளைக்கு 9-10 மணி நேரம் பணியாற்றினார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 8-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சப்ஸி மண்டியில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அனில் கோஹ்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து, லூதியானா சிவில் சர்ஜன் டாக்டர் ராஜேஷ் பாகா, “உதவி காவல் ஆணையர் எங்கிருந்து கொரோணா தொற்றுக்கு ஆளானார் என்பது இன்னும் தெளிவாக இல்லை” என்றார்.
எஸ்.பி.எஸ் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜீவ் குந்த்ரா கூறுகையில், “52 வயதான உதவி காவல் ஆணையர் அனில் கோஹ்லியின் நிலை வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் மோசமடையத் தொடங்கியது. "அவருக்கு பல உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டது. அது மாரடைப்புக்கு காரணமானது” என்று கூறினார்.
கோவிட்-19 இன் நோடல் அதிகாரி கூடுதல் உதவி காவல் ஆணையர் சச்சின் குப்தா, உதவி காவல் ஆணையர் அனில் கோஹ்லிக்கு பிளாஸ்மா சிகிச்சைக்கான நன்கொடையாளர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பு அவர் காலமாகிவிட்டார் என்று கூறினார்.
இதனிடையே, லூதியானா காவல்துறையின் மற்றொரு உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு (ஏ.எஸ்.ஐ) பரிசோதனையில் வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை, லூதியானா நகர காவல்துறையைச் சேர்ந்த நான்கு போலீசார் மறைந்த உதவி காவல் ஆணையர் அவரது கான்ஸ்டபிள் ஆயுதபோலீஸ் மற்றும் எஸ்.எச்.ஓ (நேரடி தொடர்புள்ள இரண்டு பேர்) மற்றும் ஏ.எஸ்.ஐ (நேரடி தொடர்புள்ளவர்) ஆகியோருக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.