scorecardresearch

போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஐ.எஸ்.ஐ உடன் தொடர்புடைய 2 ராணுவ வீரர்கள் கைது

Two soldiers arrested for ‘links to drug racket, ISI’: இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஐ.எஸ்.ஐ உடன் தொடர்புடைய 2 ராணுவ வீரர்கள் கைது

பஞ்சாப் காவல்துறை செவ்வாய்க்கிழமை இரண்டு இராணுவ வீரர்களைக் கைதுசெய்ததன் மூலம் “எல்லை தாண்டிய உளவு வலையமைப்பை” உடைத்துள்ளதாக கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், 19 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த சிப்பாய் ஹர்பிரீத் சிங் (23), மற்றும் 18 ஆவது சீக்கிய லைட் காலாட்படையைச் சேர்ந்த சிப்பாய் குர்பேஜ் சிங் (23).

அமிர்தசரஸில் சீச்சா கிராமத்தில் வசிக்கும் ஹர்பிரீத் சிங், அனந்த்நாகில் பணிபுரிந்து வந்துள்ளார்; டார்ன் தரனில் உள்ள புனியன் கிராமத்தைச் சேர்ந்த குர்பேஜ் சிங், கார்கிலில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.பி நவீன் சிங்லா தலைமையிலான ஜலந்தர் கிராமப்புற காவல்துறை, மே 24 அன்று கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல்காரன் ரன்வீர் சிங் என்பவரிடமிருந்து இந்திய ராணுவத்தை நிலைநிறுத்துவது மற்றும் செயல்படுவது தொடர்பான ரகசிய ஆவணங்களை மீட்டுள்ளதாக ஒரு செய்திக்குறிப்பில் காவல்துறை இயக்குநர் ஜெனரல் திங்கர் குப்தா தெரிவித்தார்.

விசாரணையின் போது, ​​ஹர்பிரீத்திடமிருந்து ஆவணங்களை பெற்றுள்ளதாக ரன்வீர் கூறியதாக கூறப்படுகிறது. ஹர்பிரீத் மற்றும் ரன்வீர் இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

“ரன்வீர் சிங், சிப்பாய் ஹர்பிரீத் சிங்கை பாதுகாப்பு தொடர்பான இரகசிய ஆவணங்களைப் பகிர்ந்தால் பணம் தருவதாக ஊக்கப்படுத்தியுள்ளார், அதைத் தொடர்ந்து ஹர்பிரீத் அவரது நண்பர் சிப்பாய் குர்பேஜை இதுபோன்ற தேச விரோத உளவு நடவடிக்கைகளுக்கு தூண்டியுள்ளார்,” என்று டிஜிபி கூறினார்.

குர்பேஜ் கார்கிலில் உள்ள 121 காலாட்படை படையணி தலைமையகத்தில் எழுத்தராக பணியாற்றி வருவதால், இந்திய ராணுவம் தொடர்பான வியூகங்கள் மற்றும் தந்திரங்கள் போன்ற தகவல்களைக் கொண்ட இரகசிய ஆவணங்களை கையாண்டுள்ளதாகவும் டிஜிபி கூறினார்.

இரண்டு சிப்பாய்களும் தகவல்களைப் பகிர்ந்ததற்காக பணம் பெற்றதாகவும், ரன்வீர் சிங் ஹர்பிரீத் சிங்கிற்கு பணம் கொடுப்பார். ஹர்பிரீத் பணத்தை குர்பேஜின் கணக்கிற்கு மாற்றுவார், என்றும் டிஜிபி கூறினார்.

ஜூலை 2 ம் தேதி கார்கிலில் உள்ள ஜலந்தர் காவல்துறை குழுவுக்கு இராணுவம் இரண்டு வீரர்களையும் ஒப்படைத்தது. திங்களன்று, அவர்கள் ஜலந்தரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். காவல்துறை அவர்களை ஜூலை 11 வரை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மே வரை, இரு ராணுவ வீரர்களும் 900 க்கும் மேற்பட்ட வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களின் புகைப்படங்களை ரன்வீருடன் பகிர்ந்து கொண்டனர். ரன்வீர் அந்த தகவல்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு நேரடியாகவோ அல்லது கோபி என அடையாளம் காணப்பட்ட மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரர் மூலமாகவோ வழங்கியுள்ளார்.

ரன்வீர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 1 ம் தேதி கோபி கைது செய்யப்பட்டார். அமிர்தசரஸில் உள்ள டாக் கிராமத்தைச் சேர்ந்த கோபி, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல் சிண்டிகேட்டுகள் மற்றும் ஐ.எஸ்.ஐ உடன் தொடர்பில் இருந்துள்ளார்.

சிக்கந்தர் என அடையாளம் காணப்பட்ட ஐ.எஸ்.ஐ. செயற்பாட்டாளருடனும், கோத்தர் என அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரனுடனும் தகவல்களை பகிர்ந்துக் கொண்டதை கோபி ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மறைகுறியாக்கப்பட்ட பயன்பாடுகள் (Encrypted Apps) வழியாக தகவல் அனுப்பப்பட்டதாக டிஜிபி கூறினார்.

அதிகமான நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன என்று எஸ்.எஸ்.பி நவீன் சிங்லா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Punjab two soldiers arrested for links to drug racket isi