மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது மகன் ஆஷிஷைப் பற்றி கேட்டதற்குப் பிறகு ஒரு பத்திரிகையாளரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட வீடியோவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மகனைப் பற்றி பத்திரிகையாளர் அவரிடம் கேள்வி கேட்கும் போது அஜய் மிஸ்ரா துஷ்பிரயோகமாக நடந்துக் கொள்வதைக் காணலாம். அமைச்சர் பின்னர் பொறுமையை இழந்து, கோபத்துடன் வாக்குவாதம் செய்கிறார், அப்போது அவர், “பத்திரிக்கையாளர்கள் திருடர்கள். ஒரு அப்பாவியை சிறைக்கு அனுப்பியுள்ளனர். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்கள் மைக்கை அணைக்கவும்...நீங்கள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்?" என்று கூறுவதாக வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும், மிஸ்ரா பத்திரிகையாளரை நோக்கி கோபத்துடன் வந்து, அவரது மைக்ரோஃபோனைப் பிடுங்குகிறார்.
வீடியோவின் நம்பகத்தன்மையை இந்தியன் எக்ஸ்பிரஸ் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நான்கு விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 குற்றவாளிகளில் ஆஷிஷ்-ம் அடங்குவார்.
திங்களன்று, உத்திரபிரதேச காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு எதிராக கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் மேலும் நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யக் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளது.
முன்னதாக, லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக உத்திரபிரதேச காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையை விவாதிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் அலுவல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் அஜய் மிஸ்ராவின் மகன் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil