கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் கத்தார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம், தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தீர்ப்பு குறித்த முழு விவரம் கிடைத்த உடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரண தண்டனையின் தீர்ப்பால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம்.விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சட்டக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து சட்ட விருப்பங்களையும் ஆராய்ந்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Qatar court sentences 8 ex-Indian Navy officers to death, MEA says exploring legal options
இதற்கிடையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அந்த அறிக்கையில், “இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். உன்னிப்பாக கண்காணிக்கிறோம். சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.
கத்தார் அதிகாரிகளிடமும் தீர்ப்பை எடுத்துக் கூறுவோம். இந்த வழக்கின் விசாரணையின் ரகசிய தன்மை காரணமாக, இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்த கருத்தையும் கூறுவது பொருத்தமாக இருக்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் குறித்து பல்வேறு ஊகங்கள் பரவிவரும் நிலையில் வழக்கின் முதல் விசாரணை மார்ச் 29ஆம் தேதி நடைபெற்றது. இந்த விசாரணை குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கடற்படை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் கூறினார்கள்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு, கத்தார் புலனாய்வு அமைப்பான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோவால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
8 கடற்படை முன்னாள் வீரர்களான கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் புரேனேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணாகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் சேவை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“