ஆர்.எஸ்.ஷர்மா இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவித்திருக்கிறது மத்திய அமைச்சகம்.
2015ம் ஆண்டு ஆர்.எஸ்.ஷர்மா ட்ராய் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மூன்று வருடங்களுக்கு அப்பணியில் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரின் பணியினை 10.08.2018யில் இருந்து 30.09.2020 நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. சமீபத்தில் ஆதார் அட்டை எண்ணை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரில் தனிப்பட்ட நபரின் தகவல்கள் திருடுபோவதாகவும், அது பாதுகாப்பற்றதாகவும் இருக்கிறது என்று பொதுமக்கள் அவ்வபோது குறை கூறுவது வழக்கம்.
ஆதார் அட்டை தொடர்பான சர்ச்சை
இது தொடர்பாக ஷர்மாவிடம் “இவ்வளவு பாதுகாப்பானதாக ஆதார் எண் இருக்குமென்றால் உங்களின் ஆதார் எண்ணை ட்வீட் செய்யுங்கள்” என்று அவரின் ஃபாலோவர் ஒருவர் கேள்வி எழுப்ப, ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளார் ஷர்மா.
என்னுடைய ஆதார் எண்களை இங்கே நான் பதிவு செய்கிறேன். அதனால் என்னுடைய தனிநபர் வாழ்வில் என்ன பிரச்சனை வரக்கூடும் என்று யாராவது ஒருவர் பதில் கூறுங்கள் என்று கூறி தன்னுடைய ஆதார் எண்ணை பதிவு செய்திருக்கிறார்.
இதனை சவாலாக ஏற்றுக் கொண்ட பிரான்ஸ் நாட்டினை சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆராய்ச்சியாளர் ஷர்மாவின் ஆதார் எண்ணை ஹேக் செய்து அவரின் பிறந்த தேதி, முகவரி, அலைபேசி எண் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக பதிவிட்டிருக்கிறார்.
மேலும் ஷர்மாவின் வங்கிக் கணக்குகள் எதிலும் அவருடைய ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றும் தகவல் அளித்திருக்கிறார் அந்நபர். இந்த சர்ச்சை இந்தியா முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.