புதுச்சேரி 15–வது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் 4–ஆம் நாள் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் பேசினார். அப்போது, தமிழ்நாட்டை பின்பற்றி புதுச்சேரியில் இருமொழிக் கொள்கையே போதும், மும்மொழிக் கொள்கையை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் மூலம் திணிக்கக் கூடாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்படும் என்றும், புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை தான் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சரின் பேச்சை கண்டித்து சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, பேசுகையில், "புதுச்சேரியில் திணிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று ஆணவத்துடன் அமைச்சர் பதிலளித்துள்ளார். அமைச்சர் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தி இருக்கிறார். அதற்கு இரண்டு அமைச்சர்கள் வக்காளத்து வாங்கி பேசுகிறார்கள். இது சட்டமன்ற மரபை மீறும் செயல்.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை மக்கள் எல்லாம் ஓரணியில் நின்று எதிர்த்து வருகிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதிரி தேர்வில் 85 சதவீதம் தோல்வி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கண்டிப்பாக ஏற்கமாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார்.
ஆனால் புதுச்சேரி அரசு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை சிவப்பு கம்பளம்போட்டு வரவேற்கிறது. சமர்கசிக்ஷா திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ. 39 கோடி அளித்துள்ளது. அதன் மூலம் கல்வி மேம்பாடு ஏதும் நடக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு இந்த அரசு எவ்வளவு தொந்தரவு கொடுக்கிறது என்பதை புதுச்சேரி மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ் மொழியை மறைத்து மாற்று மொழியை மாணவர்களிடம் திணிக்க முயற்சிக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பெரிதும் பாதித்துள்ளார்கள். இதற்கு பெற்றோர்கள், சமூக அமைப்புகள், தமிழ் அறிஞர்கள் எல்லாம் எதிர்க்கிறார்கள். ஆனால் அமைச்சர் அராஜகமாக அமல்படுத்துவோம் என்கிறார். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
மக்கள் ஆதரவு இல்லை என்பதை கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியாளர்கள் அறிந்துள்ளனர். இருப்பினும், ஆட்சி அதிகாரத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க நினைக்கிறார்கள். முதல்வர் அவர்கள் இந்த மும்மொழிக்கொள்கையை ஆதரிக்கிறேன் என்று சொன்னால் அவருக்கும் புதுச்சேரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.