/indian-express-tamil/media/media_files/2025/03/25/y2TAJWdVD6RtSRYyDqgo.jpg)
"அரிக்கன்மேடு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். தமிழகத்தில் கீழடி அகழாய்வு மூலம் தான் தமிழர்களின் தொல் நாகரீகம் இன்றைக்கு வெளிக் கொணரப்பட்டு இருக்கிறது. கீழடி போன்று பெருமை மிக்கதுதான் அரிக்கன்மேடு." என்று புதுச்சேரி எதிர்க் கட்சித் தலைவர் இரா. சிவா கூறினார்.
புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை மானிய கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்திற்கு நீண்ட கால அனுபவம் பெற்றவர் துணைநிலை ஆளுநராக இருக்கிறார். அவருடைய அனுபவத்தை வைத்து பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட சிறப்புக்கூறு நிதி ரூ. 500 கோடி அளவில் நிதி எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உள்ளார். ஆனால் அந்த ஆய்வில் அவர் கண்டுபிடித்த குறைகள் என்ன?. அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டனவா என்பது குறித்து இந்த அவைக்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு துறையும் கொள்கை முடிவுகளுக்கும், திட்ட அனுமதிக்காகவும், நிதி ஒதுக்கீட்டிற்காகவும் கோப்புகளை முறையாக செயலாளர், தலைமைச் செயலர், முதல்வர் வழியாக ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஆளுநர் அலுவலகம் அந்த கோப்புகள் மீது மீண்டும் சந்தேகத்தை கிளப்பி விசாரணை மேற்கொள்வதும், காலதாமதம் ஏற்படுத்துவதும் திட்டச் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக அமைகிறது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மிகப்பெரிய அவமானம். இச்செயல் களையப்பட வேண்டும்.
இந்த அரசு அமைக்கப்பட்டதிலிருந்து சிறப்பு நிதி, ஒன்றிய திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களான விமான நிலைய விரிவாக்கம் – ரூ. 1825 கோடி, புதிய சட்டமன்றம் ரூ. 480 கோடி, சுகாதாரத்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ, 500 கோடி, மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ரூ. 300, தேசிய பல்கலைக்கழகம் அமைக்க ரூ. 453 கோடி என மொத்தம் ரூ. 5,828 கோடி சிறப்பு நிதியை மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் துணைநிலை ஆளுநர் ஒன்றிய அரசை நேரில் அணுகி இத்திட்டங்களை பெற்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் அவரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அப்படி அவர் செய்யும் பட்சத்தில் கடந்த காலத்தில் புதுச்சேரி நலனுக்காக பாடுபட்ட துணைநிலை ஆளுநர்கள் போற்றுவது போல் இவரையும் புதுச்சேரி மக்கள் நினைவில் கொண்டு போற்றுவார்கள்.
பாண்லே நிறுவனத்தில் தேசிய பால்வள வாரியத்துடன் இணைந்து ரூ. 34 கோடியில் ஐஸ்கிரீம் பிரிவு நடத்துவது என்றும் ரூ. 4 கோடியில் 5 பால் குளிரூட்டும் சாதனம் நிறுவுதல் என்றும் பால் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்க உள்ளதாகவும், 75 விழுக்காடு மானியத்தில் கறவை மாடு வாங்குவது என்றும் அறிவித்துள்ளீர்கள். இவைகளை செய்வதற்கு முன்பு முதலில் பாண்லேவில் இருக்கின்ற நிர்வாக சீர்கேடுகளை களைவது அவசியம். இன்றைய நிலையில் லாபத்தோடு செயல்பட்ட நிர்வாகம் ரூ. 24 கோடி கடனில் தத்தளிக்கிறது. 500 பேர் இயக்கக் கூடிய நிறுவனத்தில் 980 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் இபிஎப், கிராஜூவிட்டி ரூ. 20 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து அவர் தலைமையில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும்.
மூடப்பட்ட பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி, ஸ்பின்கோ போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் வேலை இழந்த தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்து அவர்களுக்கு சேர வேண்டிய பணிக்கொடை போன்றவைகள் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பளம் உள்ளிட்ட பணிக்கொடை கிடைக்காத விரக்தியில் பாசிக் ஊழியர் ஒருவர் நிறுவன வாசலில் பெட்ரோல் ஊற்றி எரித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். தொழிலாளர்களால் அந்த நிர்வாகங்கள் நஷ்டமடைய வில்லை. நிர்வாகம் செய்த அதிகாரிகளால் தான் வீணானது. அரசு ரெஸ்டோ பார் திறப்பதில் காட்டிய ஆர்வத்தை பாசிக் நிறுவனத்திற்கு ரூ. 120 கோடிக்கு மது விற்பனைக்கு ஏலம் விட்டிருந்தால் பாசிக் இன்று கடனில் இருந்து மீண்டு இருக்கும். அரசுக்கு வருவாய் ஏற்பட்டிருக்கும். இவ்விஷயத்தில் அரசு தோல்வி கண்டுள்ளது.
புதுச்சேரியில் நீண்ட காலமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உள்ளாட்சி நிர்வாகிகள் தடைபடுத்தப்படுவதுடன், நகர் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிப் பணியும் தடைபடுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் வழக்கு மன்றம் சென்று தீர்ப்பு பெற்றோம். அந்த அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசு முன்வர வேண்டும். புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக மாற்றி அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தியாளர் மன்றத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு மனைப்பட்டா, அடையாள அட்டை, லேப்–டாப், பஸ் பாஸ் கொடுக்க வேண்டும். புற்றீசல் போல் உருவெடுத்து வரும் வெப் டி.வி, யூடியூப் சேனல் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும்.
அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கொடுக்க வேண்டும். அங்கன்வாடியில் முறைப்படி பணியமர்த்தப்பட்ட 200 ஊழியர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு பயன்படுத்த படுபவர்களுக்கு ரூ. 6 ஆயிரம், உதவியாளருக்கு ரூ. 4.500 வழங்குவது எந்த விதத்தில் நியாயம். சட்டமன்றத்தில் உயர்த்தி அறிவித்த சம்பளத்தை கூட தர மறுக்கிறீர்கள். இந்த ஆண்டு தருவீர்கள் என்று நம்புகிறேன்.
அமைப்புசாரா தொழிலாளர்களின் பல்வேறு தொழில்களுக்கு குறைந்தபட்ச கூலியை வழங்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வணிக நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் வேலை நேரம், பணி பாதுகாப்பு, பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் இவைகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். நகரப் பகுதியில் வீட்டு வேலை செய்யும் பெண் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். 10 ஆயிரம் தொழிற்சாலைகள் இருக்கின்ற புதுச்சேரியில் தொழில் தகறாறுகளை தீர்த்து வைக்கும் சமரச மையத்திற்கு வருகிற புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்காமல் தொழிற்சாலை முதலாளிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல் படுவதை தடுக்க வேண்டும். சமரச அதிகாரிகள் நியாயத்தின் பக்கம் நின்று பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். சமரச அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். நீண்ட நாட்களாக அப்பொறுப்பில் இருப்பவர்களை மாற்ற வேண்டும். காலாப்பட்டு சாஷன் கம்பெனிக்காக அரசாங்கமே இயங்குகிறது. அங்கு இருமுறை விபத்து ஏற்பட்டு 6 தொழிலாளர்கள் இறந்துள்ளார்கள். ஆனால் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதில்லை.
தொழிலாளர்களின் குறைகளை களைவதற்காக கேரளாவை பின்பற்றி புதுச்சேரி அரசு முதல்வர் தலைமையில் தலைமைச் செயலர் உள்ளிட்ட 16 உறுப்பினர்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஆலோசனை மன்றம் தற்போது செயல்பாட்டில் இல்லை. அம்மன்றம் இருந்தால் தொழிற்சாலைகள் எதனால் வெளியேறுகிறது என்று கண்டுபிடித்து சரி செய்ய முடியும். மாநிலத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் ஜிஎஸ்டி, மின் வரி, தொழில் வரி முறையாக கட்டி வந்தாலும், தொழிற்சாலை விரிவாக்கம் என்று வரும்போது அவ்வளவு சீக்கிரத்தில் அனுமதி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை போக்க வேண்டும். உண்மையான வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றால் ஐடி பார்க் கொண்டு வர வேண்டும். ஈஸி ஆப் டூயிங் பிசினஸ் எனும் திட்டத்தில் மாநில அளவில் எளிதாக தொழில் தொடங்கும் அம்சங்கள் இன்னும் எளிதாக்க பட வேண்டும். தொழில் பாலிசியில் சிறப்பு சலுகை அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.
கொம்யூன் பஞ்சாயத்துகளில் குப்பைகளை அகற்றுவதற்கான ஒப்பந்தம் ஹச் ஆர் ஸ்கொயர் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு அவர்கள் முறையாக குப்பைகளை எடுக்காததால் கிராமந்தோறும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 11,131 வழங்குவதற்கு பதிலாக வெறும் ரூ. 7,500 மட்டும் வழங்குவதும், நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருக்கும் நிலை தொடர்கிறது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப் மற்றும் இஎஸ்ஐ தொகையை அலுவலகத்தில் செலுத்தாமல் உள்ளனர். இப்படிப்பட்ட நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்து புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வசூலிக்க வேண்டும். அதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 44 கோடி வருவாய் கிடைக்கும். அதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேம்பாட்டு நிதி அளிக்கலாம். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை விரைத்து கொடுக்க வேண்டும். உள்ளாட்சித் துறையின் கீழ் செயல்படும் வில்லியனூர் கஸ்தூர்பாய் உள்ளிட்ட பல்வேறு திருமண மண்டபங்கள் இடிந்தும், பாழடைந்து உள்ளதை புதுப்பிக்க வேண்டும். வில்லியனூர் மார்க்கெட் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி ஊழியர்களின் பணி ஓய்வுக்கு பின் அவர்களுக்கான ஓய்வூதியம் அரசே நேரடியாக வழங்க வேண்டும். நகராட்சி ஊழியர்ளுக்கான சம்பளத்தை ஒன்றிய அரசே வழங்க வலியுறுத்த வேண்டும். இரட்டை என்ஜின் ஆட்சியில் மாநில அந்தஸ்து கேட்டால் கூட உடனே ஒன்றிய அரசு வழங்கும். டெல்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி இருந்ததால் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. தற்போது அங்கும் உங்கள் ஆட்சி தான் இங்கும் உங்கள் ஆட்சிதான். கேட்டால் கொடுப்பார்கள்.
அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் நிரப்ப வேண்டிய 2 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு 1992–ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய நுழைவு வரி பாக்கி ரூ. 118 கோடியை பெறுவதற்கான முயற்சியை இந்த அரசு எடுக்க வேண்டும். கேபிள் டிவி கட்டணம் தமிழ்நாட்டில் உள்ளது போல் புதுச்சேரியில் நிர்ணயம் செய்து முறையாக வசூல் செய்யாமல் ஒரு இணைப்புக்கு வெறும் ரூ. 8 வசூலிக்க உத்தரவிட்டது யார்?. தனியார் கொள்ளையடிக்க அரசு துணை போகிறது?. இதன் மூலம் அரசுக்கு ரூ. 150 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசே இந்த வருமான இழப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளாட்சித் துறை எப்படி தன்னிச்சையாக செயல்பட முடியும்.
அறிவிக்கப்பட்ட நில மறு அளவை காலத்தோடு முடித்து நில மதிப்பீட்டை முறையாக மேம்படுத்த வேண்டும். நிரந்தர சாதி சான்றிதழ் வழங்குவதாக அறிவிப்பு செய்த நிலையில் அத்துடன் இணைத்து முஸ்லிம்களுக்கு சிறுபான்மை சான்றிதழ் மற்றும் மீனவர்களுக்கான சான்றிதழ் போன்றவைகளையும் நிரந்தர சான்றாக அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி அரசு குழு அமைத்து மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கள் தொகை 5 ஆயிரம் என கணக்கிட்டு வருவாய் கிராமங்களை உயர்த்த வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய்த் துறையில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் பணியிடங்களும், பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் சமூகத்தில் கீழ் உள்ளவர்களுக்கு நில அளவைத் துறை மூலம் இலவச மனை பட்டாக்கள் வழங்கி வந்த திட்டம் தற்பொழுது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் அத்திட்டத்தை புதுப்பித்து நிலம் கையகப்படுத்தி மனைப்பட்டா வழங்க வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளாக வழக்கை காரணம் காட்டி வக்பு வாரியத்திற்கு தலைவர் நியமிக்கப்படாத காரணத்தால் முஸ்லீம் மக்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவி, உலமாக்களுக்கான பென்ஷன் உள்ளிட்ட திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு தமிழகத்தை பின்பற்றி இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் BCM சான்றிதழ் அளிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கான 2 சதவீத இடஒதுக்கீடு சமீப காலமாக புறக்கணிக்கப்படுவதான குற்றச்சாட்டு உள்ளதை அரசு களைய வேண்டும். வாரியத்திற்கு சொந்தமாக மாநில முழுவதும் உள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகிறது. அதனை தடுக்க வேண்டும். இத்துறைக்கு சொந்தமான நிலம், கட்டிடங்கள் ஆகியவைகளை கணக்கெடுத்து வெப்சைட்டில் வெளியிட வேண்டும்.
வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக உள்ள கிருமாம்பாக்கம், பிச்சவீரன்பேட், கணுவாபேட், வில்லியனூர் பகுதியில் உள்ள நிலங்கள் 40 குழி, 30 குழி, 1 காணி –40 குழி என குத்தகை விடப்பட்டுள்ளது. அதற்கு ஆண்டிற்கு 10 மூட்டை நெல், ரூ. 500 என குத்தகை வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம். ரூ. 500 கோடி மதிப்புள்ள சொத்திற்கு ஆண்டிற்கு வெறும் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரம் தான் வருவாய் கிடைக்கிறது. இந்த சொத்துக்கள் மீதான குத்தகை, வாடகை இவைகளை முறைப்படுத்தி முறையாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் சொத்துக்கள் குறித்து உரிய தரவு இல்லாத காரணத்தால் கோவில் சொத்துக்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்யும் முறை தொடர்ந்து வருவது கண்டனத்திற்குரியது. அப்படிப்பட்ட முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கையை பாரபட்சமின்றி அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில் சீரமைப்பு பணிக்கு ரூ. 10 லட்சம் தருவதாக அறிவித்தீர்கள். ஆனால் அதை சென்ற ஆண்டே நிறைவேற்றாமல் இவ்வாண்டு ரூ. 5 லட்சமாக குறைத்துள்ளீர்கள். அதையாவது இந்தாண்டு கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் ரூ. 10 லட்சம் கொடுத்தால் வரவேற்போம்.
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் அசையா சொத்துக்கள் தெரிகிறது. அசையும் சொத்துக்களான தங்கம், வைரம், வைடூரியம் எல்லாம் வங்கியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்மட்ட கமிட்டி அமைத்து அவற்றை ஆய்வு செய்து சொத்துக்கள் இருப்பதை உறுதிப்படுத்தி மக்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும்.
துறைமுக விவகாரத்தில் முதல்வர் கைகள் கட்டப்பட்டுள்ளன. காரைக்கால் மார்க் துறைமுகம் 2009–ஆம் ஆண்டு 30 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டு அந்நிறுவனம் 11 வங்கியில் கடன் பெற்றுவிட்டதாகவும், அதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அந்த சொத்தை ஏலம் விட்டதாகவும் அதில் இந்தியாவில் உள்ள ஏழைகளான அதானி, வேதாந்தா நிறுவனங்கள் கலந்து கொண்டு, ரூ. 3,400 கோடிக்கு எடுத்துள்ளனர். இதற்கு புதுச்சேரி அரசு ஏதும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. தனியார் துறைமுகம் நடத்தினாலும் அரசுக்கான வருமானம் இல்லை என்பது ஏமாற்றம். தனியார் நிறுவனம் ரூ. 100 கோடி வருமானம் ஈட்டினால் புதுச்சேரி அரசுக்கு ரூ. 2.60 கோடி வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வரவு–செலவில் ஒரு டன்னுக்கு ரூ. 50 கொடுத்தால் கூட புதுச்சேரி அரசுக்கு ரூ. 740 கோடி வருமானம் கிடைத்திருக்கும். ஆனால் தற்போது ஆண்டுக்கு அரசுக்கு வெறும் ரூ. 12 கோடி மட்டுமே கிடைக்கிறது. இது ஒரு மோசமான ஒப்பந்தம். இது சம்பந்தமாக ஒன்றிய அரசிடம் எடுத்துக்கூறி 2.5 சதவீத ஒப்பந்தத்தை 10 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்க வேண்டும். துறைமுகத்திற்கு வந்து இறங்கும் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு டன்னுக்கு ரூ. 340 வாங்குகிறது. புதுச்சேரி அரசு ரூ. 50 வாங்கினால் கூட அது புதுச்சேரிக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும்.
பல வருடங்களாக சர்வதேச மற்றும் தேசியப் போட்டியில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விளையாட்டு கவுன்சிலில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மோசடி விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி, அந்த பணத்தை மீட்க வேண்டும். சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் அரசு நிலத்தில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கி புனே, பெங்களூர் மற்றும் ராஞ்சியில் உள்ளதை போல் சர்வதேச தரத்துடன் கூடிய அனைத்து விளையாட்டு அரங்கங்கள் உள்ள விளையாட்டு கிராமத்தை ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு ஆசிரியர் பணியிடம் நிரப்ப வேண்டும்.
புதுச்சேரி பல்கலைக் கழக பதிவாளர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். முன்னாள் துணைவேந்தர் குர்மிர்சிங் மீது பல்கலைக் கழக செயற்குழு சுமத்தும் பல்வேறு மோசடி புகார்கள் குறித்து சி.பி.ஐ விசாணைக்கு உட்படுத்த வேண்டும். 54 பாடப்பிரிவுகளில் 20 பாடப்பிரிவுகளுக்கும் மட்டும் 25 சதவீத புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மீதமுள்ள பாடப்பிரிவிலும் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக் கழகத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கவில்லை. மத்திய உயர் கல்வி நிதி 500 கோடி கடன் வாங்கி 11 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டடங்கள் 2 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை.
நாடு முழுவதும் மின் விநியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஒன்றிய மின்துறை அமைச்சகம் புதுச்சேரி மின் துறைக்கு ‘ஏ’ கிரேடு அந்தஸ்தை கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் ஏன் தனியார் மயம் என்பது தான் மக்களின் எண்ணமாக உள்ளது. மின்நுகர்வோர் வைப்பு நிதி பலகோடி இருக்கும்போது மாதம்தோறும் புதியதா வைப்பு நிதி வீட்டிற்கு ஒரு கிரோ வாட்டிற்கு ரூ. 35–ம் தொழிற்சாலைகளுக்கு ரூ. 200–ம் வசூலிக்கப்படுவது ஏன்?. அந்த நிதி எங்கே செல்கிறது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ப்ரீபெய்டு மின் மீட்டரை அரசு கட்டாயம் வழங்கும் என்றால் அரசே தரமான ப்ரீபெய்டு மீட்டரை பொருத்த வேண்டும். நுகர்வோர்களிடம் அதற்கான கட்டணத்தை வசூலிக்கக் கூடாது.
மின்துறையில் 1000 பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இரட்டை பணிச்சுவை ஏற்படுகிறது. இளநிலை பொறியாளர் பணியிடம் நிரப்பும்போது வயது தளர்வு அளிக்க வேண்டும். மின்சாதனங்கள் காலாவதியாகிவிட்டதை மாற்ற வேண்டும். கடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்தபடி மின்துறை ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டத்தை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பல்வேறு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கோடிக் கணக்கில் மின்பாக்கி வைத்துள்ளன. இதுபோன்ற இழப்புகளை மக்கள் மீது சுமத்தாமல் காலத்தோடு வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டணத்தில் உள்ள பல்வேறு குளறுபடிகளை களைய வேண்டும்.
தமிழ்நாட்டில் மாநாடு நடத்தியும், உலக நாடுகளில் முதலீடுகளை ஈர்த்தும் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டுவந்து பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதுபோல் புதுச்சேரியில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.
மீனவர்கள் பிரச்னையில் ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகவும், தமிழ்நாடு, காரைக்காலுக்கு ஒரு மாதிரியுமான நிலையை எடுக்கிறது. இது மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை. புதுச்சேரி அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்வு காண வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 2004 முதல் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு முன்பாக ஆர்.வீ. ஜானகிராமன் முதல்வராக இருந்தபோது தங்கமணி தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்து அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி தான் அந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பு சாதியினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு என்பது எந்தவித தரவுகள் இன்றி வழங்கப்பட்டுள்ளது. வெறும் 1.5 சதவீதம் உள்ள மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது எவ்வளவு பெரிய மோசடி திட்டம் என்பதையும், சமூக அநீதி என்பதையும் இந்த அரசு உணர வேண்டும். சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்விக் கடனை ரத்து செய்வதாக 2021ஆம் ஆண்டு முதல்வர் அறிவித்தார். ஆனால் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிதாக இஸ்லாம் மதம் தழுவியவர்களுக்கு தமிழ்நாட்டைப்போல் பிசிஎம் அந்தஸ்து வழங்க வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை பெறும் திட்டம், முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் சுமார் 18 ஆயிரம் பெண்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிக்கன்மேடு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். தமிழகத்தில் கீழடி அகழாய்வு மூலம் தான் தமிழர்களின் தொல் நாகரீகம் இன்றைக்கு வெளிக் கொணரப்பட்டு இருக்கிறது. கீழடி போன்று பெருமை மிக்கதுதான் அரிக்கன்மேடு. ஆகவே, அரிக்கன்மேட்டில் அகழாய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசை வற்புறுத்த புதுச்சேரி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊசுட்டேரியை சுற்றலா வளர்ச்சிக் கேந்திரமாக மாற்ற வேண்டும். தீம் பார்க், ஏற்படுத்த வேண்டும். எம்ஜிஎம் போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் சுற்றுலாவை வளர்த்தெடுக்க வேண்டும். பாகூர் ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி இவைகளை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக கேவிகே பண்ணையில் பணியாற்றும் F.T.C.L.R ஊழியர்களை பல்வேறு துறைகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள 48 மாத சம்பளத்தை வழங்க வேண்டும். காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் அரசு ஒரு கொள்கை முடிவெடுத்து பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாட்கோ மூலம் வழங்கப்பட்ட சிறுதொழில் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பாட்கோவில் 15 ஆண்டுகளாக பணியாற்றும் பொறியியல் பிரிவைச் சேர்ந்த 22 தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். புதிய கல்விக் கடன் வழங்க வேண்டும். ஐஏஎஸ் – ஐபிஎஸ் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்படும் சிறப்புக்கூறு நிதியில் இருந்து அவர்களுக்கு கூடுதலாக உதவித் தொகை வழங்க அரசு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்கள் குடியிருக்கும் அனைத்து கிராமங்களிலும் சுகாதாரமான குடிநீர், மின்சார வசதி, சாலை வசதி, கல்வி நிலையம், கழிவுநீர் வாய்க்கால், சமுதாய நலக்கூடம், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்புக்கூறு நிதியில் இருந்து செய்ய வேண்டும்.
வணிக உரிமம் புதுப்பிக்கும் கட்டணத்தை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தொழில் செய்யும் இடத்தின் அளவின் அடிப்படையில் அளவீடு செய்து சதுர அடியில் கட்டணம் வசூலிக்க உள்ளதை அரசு பரிசீலிக்க வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழ் மொழி, இனத்திற்காக வாழ்ந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர், புதுச்சேரி முன்னாள் முதல்வர்கள் பாரூக் மரைக்காயர், சண்முகம், ராமசாமி, டி. ராமச்சந்திரன், ஆர்.வீ. ஜானகிராமன், முன்னாள் அமைச்சர் கண்ணன் ஆகியோர்க்கு சிலை அமைக்க வேண்டும். இல்லை ஏதாவது முக்கிய இடங்களுக்கு பெயர் வைத்து மரியாதை செய்ய வேண்டும்.
நியாய விலைக்கடை தினக்கூலி ஊழியர்கள் 300 பேர் கடந்த 15 ஆண்டுகளாக பணிநிரந்தரம் கோரி வருகிறார்கள். அவர்களுக்கு பிடித்தம் செய்யும் பிஎப், இஎஸ்ஐ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கட்டாமல் இருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். பிஆர்டிசி–யில் 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் உறுப்பு மாற்றி அறுவை சிகிச்சை செய்து கொள்ள தமிழ்நாடு அரசு மானியம் வழங்குகிறது. புதுச்சேரி அரசு அவர்களுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சட்டம்–ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும். ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதை அரசு உணர வேண்டும். திருட்டு வழக்கில் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். காவல் அதிகாரிகளுக்கும் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். காவல் துறை சிறப்பாக செயல்பட வழிகாண வேண்டும். ஊர்க்காவல் படை வீரர்கள் பிரச்சனையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகத்தில் கல்விக் கடனை ரத்து செய்வதாக அறிவித்ததை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.