'மக்களுக்கு உதவாத காகிதப்பூ பட்ஜெட்': புதுச்சேரி எதிர்க் கட்சித் தலைவர் சிவா கடும் விமர்சனம்

"கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எல்லாம் கிடப்பில் உள்ள நிலையில் மணக்க மணக்க பட்ஜெட் உரை நிகழ்த்தி இருக்கிறார் முதல்வர். ஆனால் வெறும் காகித பூவாக இருக்கிறது." என்று புதுச்சேரி எதிர்க் கட்சித் தலைவர் சிவா கடும் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
R Siva Puducherry Legislative Assembly opposition leader on Puducherry Budget 2025 CM Rangaswamy Tamil News

"கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எல்லாம் கிடப்பில் உள்ள நிலையில் மணக்க மணக்க பட்ஜெட் உரை நிகழ்த்தி இருக்கிறார் முதல்வர். ஆனால் வெறும் காகித பூவாக இருக்கிறது." என்று புதுச்சேரி எதிர்க் கட்சித் தலைவர் சிவா கடும் விமர்சித்துள்ளார்.

15–வது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று 2025–26–ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்தார்.

Advertisment

இத நிலையில், 2025–26–ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: –

முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய வருமானம் ஏதும் இல்லாமல், ஒன்றிய அரசின் சிறப்பு நிதி ஏதும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலை முன்வைத்து அறிவிப்புகள் செய்திருக்கிறார்கள். கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எல்லாம் கிடப்பில் உள்ள நிலையில் மணக்க மணக்க பட்ஜெட் உரை நிகழ்த்தி இருக்கிறார் முதல்வர். ஆனால் வெறும் காகித பூவாக இருக்கிறது. புதுச்சேரியின் வருவாய், செலவினங்கள், கடன் வாங்க முடியாத நிலை ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அதில் மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் ஏதும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. புதிய தொழில் கொள்கை, வணிகர்களுக்கு சலுகைகள், ஐடி பார்க், புதிய சுற்றுலாத் திட்டங்கள் ஏதும் இல்லை. இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி இருக்கிறார்.

புதுச்சேரி மக்கள் எதிர்பார்க்கும் வேலைவாய்ப்பு, புதிய தொழிற்சாலைகள், துறைமுகம் மூலம் அரசுக்கு நேரடி வருமானம், மின்துறை தனியாருக்கு மாற்றும் முடிவை கைவிடுதல், வேலையிழந்து உள்ளவர்களுக்கு வேலை, மாநில அந்தஸ்து போன்ற எந்த உறுதியையும் பட்ஜெட்டில் தெரிவிக்கவில்லை. சிக்காகி உள்ள பாசிக், பாப்ஸ்கோ போன்ற நிறுவனங்களுக்கான நிலுவை தொகையை தருவதாக சொல்கிறார்களே தவிர அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் கூட அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்திரவாதமும் இந்த அரசு அளிக்கவில்லை. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உதவாத காகிதப்பூ பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார்.

Advertisment
Advertisements

மகளிர் உரிமைத் தொகை ரூ. ஆயிரம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் மாதம் கொடுக்க தவறிய இந்த அரசு தற்பொழுது ரூ. 2.500 தரப்போவதாக அறிவித்துள்ளது. மக்களுக்கு அது முழுமையாக கிடைத்தால் மகிழ்ச்சி. டெல்லியை பின்பற்றி புதுச்சேரியில் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டெல்லியில் மாநில வருவாயை பெருக்க பல வழிகள் உள்ளன. ஒரு சில திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நேரடி உதவி புரிகிறது. ஆனால் புதுச்சேரிக்கு அப்படி ஏதும் ஒன்றிய அரசு செய்யவில்லை. நம் மாநிலத்தில் நிதிநிலை எப்படி இருக்கிறது என்று நன்கு தெரிந்தும் முதல்வர் அறிவிப்பு செய்திருக்கிறார். அதில் அவர் சொல்லிய திட்டங்கள் அனைத்தும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் கொடுக்கப்படவில்லை.

2022–ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ. 34 கோடிக்கு அடிக்கல் நாட்டினார். அத்திட்டத்திற்கு தற்போது வெறும் ரூ. 10 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதே ஏன் என்ற கேள்விக்கு, ஈசிஆரில் லதா ஸ்டீல் நிறுவனத்திற்கு அருகில் 16 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம், நவீன மீன் அங்காடி உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் ஒரு பகுதியில் மட்டும் மீன் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. மீதி திட்டம் என்னவானது என்று தெரியவில்லை. தற்போது பேருந்து நிலையம் கட்டுவதாக சொல்லி இருக்கிறார்கள். எல்லாம் அறிவிப்பாக மட்டும் இருக்கக் கூடாது என்பது தான் எங்கள் எண்ணம் என்றார்.

கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆயுஷ்மான் இன்சூரன்ஸ் திட்டம் தோல்வி அடைந்ததாக முதல்வரே தெரிவித்தார். அதற்கு மாற்றாக புதுச்சேரி அரசு அனைவருக்கும் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் என்றார். ஆனால் இதுவரை அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஆயுஷ்மான் திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 5 லட்சம் கொடுத்தே எந்த பயனும் இல்லாதபோது தற்போது ஆளுநர் உரையில் மேலும் ரூ. 2 லட்சம் உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது வேடிக்கையாக உள்ளது.

மாநில அந்தஸ்து கேட்டு 15 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றியத்தில் ஆளுகின்றவர்கள் புதுச்சேரி மக்களின் கருத்தை, ஜனநாயக உரிமையை, சட்டமன்ற பிரதிநிதிகளின் உரிமையை உதாசீனப்படுத்தி வருகின்றனர். இது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல். தொடர்ந்து புதுச்சேரியின் உரிமைக்காக திமுக போராடும். எங்களுக்கான காலம் வரும் அப்போது கண்டிப்பாக மாநில அந்தஸ்து பெறுவோம். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 1996–ஆம் ஆண்டு தமிழகத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்ததை அடிப்படையாக கொண்டு, அப்போதைய முதல்வர் ஆர்.வீ. ஜானகிராமன் அத்திட்டத்தை இங்கு கொண்டு வந்தார். அப்போது ரூ. 10 லட்சம் ஆண்டுக்கு வழங்கப்பட்டது. அப்போது அது பெரிய பணமாக இருந்தது. இன்று ரூ. 2 கோடி அளிக்கப்படுகிறது. அந்த பணத்தில் எந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும் என்று எண்ணிப் பாருங்கள். ஆண்டுதோறும் கொடுக்க வேண்டிய தொகுதி மேம்பாட்டு நிதியை பாக்கி இல்லாமல் கொடுத்தாலே போதும். இதில் தற்போது ரூ. 3 கோடி தருவதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அது முழுமையாக ஆண்டு தொடக்கத்தில் கொடுத்தால் வரவேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின்போது, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச். நாஜிம், வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத், நாக. தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: