இந்தியர்கள் இனவெறியர்களா? உண்மை என்ன?

திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் சொல்கிறார்: திமுக தலைவர் கருணாநிதி சிகப்பில்லையா? ஜெயலலிதா சிகப்பில்லையா? எப்படி தமிழர்களை கறுப்பு எனக் கூறலாம்?

அபிலாஷ் சந்திரன்

டெல்லி: பாஜக முன்னாள் எம்.பி ”கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் நாங்கள் வாழவில்லையா? நாங்கள் இனவெறியர்கள் அல்ல என்பதற்கு இதுவே ஆதாரம்” என்று ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறியதை ஒட்டி எழுந்த சர்ச்சை சற்று விசித்திரமானது.

தென்னிந்தியர்களை எப்படி கறுப்பர்கள் என்று கூறலாம் எனக் கேட்டு நம் அரசியல் தலைவர்களும் சமூகவலைதள எழுத்தாளர்களும் அவரை துவம்சம் செய்கிறார்கள். ”என் கருத்து சரியாக வெளிப்பட வில்லை, மன்னிக்கவும்” என தருண் விஜய் தெண்டனிட்டு விட்டார். ஆனால் இப்பிரச்சனை சுலபத்தில் ஓயும் எனத் தெரியவில்லை.

திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் சொல்கிறார்: திமுக தலைவர் கருணாநிதி சிகப்பில்லையா? ஜெயலலிதா சிகப்பில்லையா? எப்படி தமிழர்களை கறுப்பு எனக் கூறலாம்?

நமக்கு இவ்வளவு கோபம் வரக் காரணம் கறுப்பின் மீதுள்ள தாழ்வு மனப்பான்மையா? நம் தோல் நிறத்தின் அடிப்படையில் வட இந்தியர்கள் நம்மை தாழ்வாக நடத்துகிறார்கள் எனும் எண்ணமா? நம் தோல் நிறம் மீது நமக்கு கழிவிரக்கம் இல்லையென்றால் நம்மை கறுப்பர்கள் என அழைக்கும் போது நமக்கு ஏன் ஆவேசம் வர வேண்டும்? ஏன் நம் மத்தியிலும் சிகப்பான தலைவர்கள் உண்டு என சொல்ல தேவை ஏற்பட வேண்டும்?

தருண் விஜய் நினைத்தது ஒன்று, அவர் சொல்லியது மற்றொன்று என எனக்குத் தோன்றுகிறது. அவரிடம் வைக்கப்பட்ட கேள்வி இந்தியாவில் இனவெறி உண்டா என்பது. இக்கேள்வி எழக் காரணம் நைஜீரிய மக்கள் இந்தியாவில் தாக்கப்பட்டதும், அதை ஒட்டி நைஜீரிய அரசாங்கம் இதை ஒரு இனவெறித் தாக்குதல் என அடையளப்படுத்தி கண்டித்ததும், அதை நம் வெளியுறவுத் துறை மறுத்ததுமே.

இந்தியர்கள் இனவெறியர்களா என்று கேட்டால் இல்லை என்று தான் நான் சொல்வேன். இங்கு சாதி உணர்வு தான் உள்ளது, இனவெறி இல்லை. இது பிற நாட்டவருக்கு சுலபத்தில் புரியாது. ஏனென்றால் அவர்களுக்கு சாதி என்றால் என்ன என சத்தியமாய் புரியாது.

ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் இன அடிப்படையிலான மோதல்களும் ஆக்கிரமிப்புகளும் தான் வரலாறு முழுக்க நிகழ்ந்துள்ளன. மதப் போர்களும் நடந்துள்ளன. இனம் மற்றும் பொருளாதார வகுப்புகளாய் மக்களை பிரிப்பதே அவர்களுக்கு வழக்கம். ஆனால் இந்தியாவில் என்றுமே இந்த வழக்கம் இருந்ததில்லை.

நாம் பல்வேறு இனக்குழுக்களாய் வாழ்ந்தவர்கள். இங்கே பேரரசுர்கள் தோன்றிய போது இந்த இனக்குழுக்கள் சேர்ந்து வாழும் சூழல் ஏற்பட்டது. அப்போது இவர்களுக்குள் ஒரு படிநிலை அமைப்பு தோன்றியது. இந்த அமைப்புக்குள் மனிதர்களை அவர்களது சமூகப் பணி மூலம் சுத்தமானவர், அசுத்தமானவர், குறிப்பிட்ட சுபாவம் உள்ளவர், திறன் கொண்டவர் என பிரித்து அடுக்கும் வழக்கம் தோன்றியது. இதுவே சாதி ஆகியது. இது மிக நெகிழ்வான அமைப்பு. பிறழ்வு, வேறுபாடு, கழிவு என அடையாளப்படுத்தப்படுபவர்களை கீழ் சாதியாய் பார்க்கும் அமைப்பு. பொருளாதாரம் மற்றும் அரசியல் பலம் மூலம் ஒரு கீழ் சாதி மத்திய சாதியாகவோ மத்திய சாதி மேல்சாதி ஆகவோ முடியும்.

சாதி, தோல் நிறம் அல்லது ஒருவரது இனத்தின் அடிப்படையிலானது அல்ல. நிலம், தொழில், கழிவு, சுத்தம் ஆகியவை தான் சாதியின் அடிப்படை. ஒருவரை ஒரு குறிப்பிட்ட நிலத்துடன் பிணைத்து வைத்து நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் தொடர்ந்து தலித்துகளாய் வைத்திருக்க முடியும். அதே நபர் நிலத்தில் இருந்து பிரிந்து நகரத்துக்கு வரும் போது அவர்களை நம் சமூகம் குப்பைக்கூடம், சாக்கடை அருகே வசிக்க நிர்பந்திக்கும். அவர்களை மலத்தை அள்ளவோ சாக்கடையை சுத்தம் பண்ணவோ செய்யும். இப்போது அசுத்தம் எனும் பெயரில் இவர்களை தலித்துகளாய் பார்க்க ஒரு சாத்தியம் நம் சமூகத்திற்கு கிடைக்கிறது. ஆனால் உண்மையில் இந்தியர்களுக்கு சுத்தத்தில் எந்த ஆர்வமும் இல்லை. நம்மைப் போல் சூழலை அசுத்தப்படுத்துகிறவர்கள் வேறெங்கும் இல்லை. ஆனால் அசுத்தத்தை உருவாக்கி, அதை ஒரு குறிப்பிட்ட சாராருடன் அடையாளப்படுத்துவதே சாதி உருவாக்கத்தின் அடிப்படை.

சுத்தத்துடனான இந்தியர்களின் மனப்பிணைப்பு மிக சிக்கலானது. .தா சைவ – அசைவ உணவுகள். இவையும் சுத்தம் vs அசுத்தம் எனும் பிரிவினையை உண்டாக்க உதவுகின்றன. சாதி மேலாண்மையை நிறுவ பயன்படுகின்றன.

இறுதியாக சாதி உளவியல் ரீதியிலானது. நாம் ஏன் நிலம், தொழில், சுத்தம் vs அசுத்தம் என இவ்வளவு மெனக்கெட்டு சாதியை முன்னெடுக்க போராடுகிறோம்? ஒன்று இதன் மூலம் குறிப்பிட்ட சாராருக்கு கிடைக்கும் அதிகாரம். இன்னொன்று இந்தியர்களின் அடையாள உருவாக்கமே சாதியை நம்பித் தான் இருக்கிறது. சாதியை எடுத்து விட்டால் நம்மில் கணிசமானோருக்கு சொந்தமாய் அடையாளம் ஏதும் இருக்காது. தத்தளித்து விடுவோம். தான் யார் என்ற கேள்விக்கு பெரும்பாலான இந்தியர்களுக்கு உள்ள பதில் நான் இன்ன சாதியை சேர்ந்தவன், என் சமூக அதிகாரம் இன்னது என்பதே. இது கௌரவ டாக்டர் பட்டம் போன்றது. நீங்கள் அடிமுட்டாளாக இருந்தாலும், எந்த திறன் அற்றவராக இருந்தாலும் உங்கள் சாதி உங்களுக்கு ஒரு ஒளிவட்டம் கொடுக்கும். இந்த கௌரவப் பட்டத்தை விட்டுத் தர இந்தியர்கள் என்றும் விரும்ப மாட்டார்கள்.

இந்த சாதி அமைப்பு நெகிழ்வாது என குறிப்பிட்டேன். வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்த போது அவர்களை பிராமணர்களுக்கும் மேலே வைத்து நம்மவர்கள் பார்த்தார்கள். இன்னொரு இனமாக அல்ல ஒரு சாதியாகவே கண்டார்கள். இதுவே பிற இனங்களுக்கும் இந்தியாவில் நடந்தது. கேரளாவில் உள்ள சிரியன் கிறித்துவர்கள் தாம் ஐரோப்பிய வம்சாவளியினர் என நம்புகிறார்கள். இந்திய சாதிய சமூகம் ஒரு கடல். இங்கே என்னவிதமான உப்பு வந்தாலும் அது கரைந்து கடலாகி விடும். இங்கே எந்த இனத்தவர் காலடி வைத்தாலும் அவர்கள் இங்குள்ள சாதிகளில் ஒன்றாய் கலந்தே ஆக வேண்டும்.

இந்த விபரங்களையும் நுணுக்கங்களையும் நாம் வெளிநாட்டவருக்கு புரிய வைக்க இயலாது. அவர்கள் நம் ஊர் சாதிய கலவரங்களையும் இனவெறியின் கண்ணாடி வழியே தான் பார்ப்பார்கள். இந்தியாவில் நிற அடிப்படையிலான பிரிவினை இல்லை என்றே தருண் சொல்ல வந்ததாய் நான் புரிந்து கொள்கிறேன். இளங்கோவனும் அதையே இன்னொரு விதமாய் சொல்கிறார். எம்.ஸி.ஸியில் என்னுடன் உ.பி பையன் ஒருவன் படித்தான். செக்கசெவேலென அமீர்கான் போல இருப்பான். அவன் தன்னை தலித் என அடிக்கடி கூறிக் கொள்வான். அவன் ஊரில் அவனுக்கு ஏற்பட்ட ஒடுக்குமுறைகளை சொல்லிப் புலம்புவான். ஆனால் அவன் சாதியை அவனாகவே சொல்லிக் கொண்டால் ஒழிய தமிழர்களுக்கு தெரியாது. அவன் கறுப்பாகவே இருந்தாலும் கூட அவன் சாதியை நம்மவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

சாதிக்கும் நிறத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஒருவனை அவனது குடும்ப பின்புலம், ஊர் பின்புலம், இதன் வழியாக அவனது சாதிய வேர் ஆகியவற்றை கண்டுபிடித்து ஒடுக்குவதே நம் வழக்கம். நம் மாநிலத்தில் எடுத்துக் கொள்வோம். கறுப்பானவர்கள் எல்லாம் இங்கே தாழ்த்தப்பட்ட சாதியா? இல்லை.

ஆக இந்தியர்கள் பல வித நிறத் தோல்கள் கொண்டவர்கள். அவர்கள் இணைந்து வாழ்கிறார்கள் என்றே தருண் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் உளறி விட்டார்.

அதோடு அவர் இன்னொன்றும் சொல்லி இருக்க வேண்டும். “நாங்கள் தோலின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதில்லை. ஆனால் சாதியின் அடிப்படையில் செய்கிறோம்”. இதை எந்த பா..க அரசியல்வாதியும் சொல்ல மாட்டார். அவர்களின் தேசியம் அடிபடும். அதனால் சொல்ல மாட்டார்கள். நாம் தருண் போன்றவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி ”இங்கு சாதி இல்லையா?” என்பதே. எங்களை எப்படி கறுப்பர் என சொல்லலாம் என்பதல்ல. 

*

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close