சபரிமலை மற்றும் ரஃபேல் வழக்குகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை அறிவிக்க உள்ளது. அயோத்தி தீர்ப்புக்குப் பிறகு நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெறும் இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முக்கியமான இந்த இரு வழக்குகளிலும் தீர்ப்பளித்து கையெழுத்திட உள்ளார்.
சபரிமலை வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமயிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் வயது பெண்கள் நுழைவதற்கான தடையை நீக்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்து வருகிறது.
செப்டம்பர் 28, 2018 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, கோயிலில் மாதவிடாய் வயதுடைய பெண்கள் நுழைவதற்கு பல தசாப்தங்களாக இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி 4 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
இந்த வழக்கில் சபரிமலை ஐயப்பன் சுவாமி ஒரு பிரம்மச்சாரி என்பதால் மாதவிடாய் வயதுடைய பெண்கள் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோயில் பாதுகாவலர்கள் வாதிடுகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் கேரளா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. முக்கியமாக இந்த போராட்டங்கள் என்.எஸ்.எஸ் போன்ற சாதி அமைப்புகள் மற்றும் சங்க பரிவாரின் வலதுசாரி இந்து அமைப்புகள் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் பங்கேற்ற கேரள பாஜக தலைவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சி வன்முறை போராட்டங்களில் ஈடுபடவில்லை என்றாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளது என்றும் அது தீர்ப்பிற்கு எதிராக மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்வதை ஆதரித்தது.
இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு சபரிமலை கோயிலில் பெண்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிப்பதற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறியது.
உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்த ஆண்டு தொடக்கத்தில் 56 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 6 ஆம் தேதி தனது தீர்ப்பை ஒதுக்கிவைத்தது.
நாளை வியாழக்கிழமை வெளியாக உள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பு கேரளாவில் பாலின சமத்துவம் மற்றும் மத பழக்கவழக்கங்கள் பற்றிய சூடான உரையாடல்களை மீண்டும் தூண்டிவிடும்.
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவிற்கு நவம்பர் 17 ஆம் தேதி சபரிமலை கோயில் திறக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே இந்த தீர்ப்பு வருகிறது. வருகிற இரண்டு மாத காலங்களில் தென் மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வார்கள். கேரளாவின் ஆளும் இடதுசாரி ஜனநாயக அரசு யாத்ரீகர்களுக்கான தங்குமிடம், சாலைகள், கழிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட விரிவான முக்கிய போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளது.
ரஃபேல் வழக்கில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பிரான்சுடனான இந்தியாவின் ஒப்பந்தத்தை எதிர்த்த மனுவை உச்ச நீதிமன்றம் முன்பு தள்ளுபடி செய்தது.
நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய மனுதாரர்களில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் அடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்தபோது, முடிவெடுப்பது, விலை நிர்ணயம் செய்தல் மற்றும் ஆஃப்செட் கூட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற செயல்முறையை உண்மையில் சந்தேகிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியது. அரசு வணிக ரீதியாக யாருக்கும் சாதகமாக இருந்தது என்பதைக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.
மறு ஆய்வின்போது, பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக விலை விவரங்களை பகிரங்கப்படுத்த முடியாது என்று மத்திய அரசு கூறியது. இருப்பினும், 126 ஜெட் விமானங்களுக்கான ஆர்.எஃப்.பி (முன்மொழிவுக்கான கோரிக்கை) விமானத்தின் அனைத்து தொழில்நுட்ப விவரங்களையும் கொண்டிருக்கும்போது ரஃபேலின் விலையை வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கும் என்று பிரஷாந்த் பூஷண் கேள்வி எழுப்பினார்.