ரபேல் போர் விமானம் சர்ச்சை : கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நாடாளுமன்ற கூட்டங்களிலும், தேசிய கட்சிகளின் அறிக்கைகளிலும் எப்போதும் இடம் பிடித்திருக்கும் ஒரு முக்கிய அம்சம் அல்லது குற்றச்சாட்டு என்ன என்றால் ரபேல் போர் விமானங்கள் தான்.
ரபேல் போர் விமானம் ஒப்பந்தம்
ஏப்ரல் 2015ம் ஆண்டு பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஃப்ரான்கோய்ஸ் ஹோலண்டேவுடன் இணைந்து புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அதில் 36 உயர் ரக போர் விமானங்களை பிரான்ஸில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. இதனை அறிவிக்கும் போது அம்பானி பிரான்ஸில் இருந்தார்.
ஃப்ரான்கோய்ஸ் ஹோலண்டேவின் காதலியை வைத்து படம் தயாரித்த ரிலையன்ஸ்
அதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்தார் ஃபரான்கோய்ஸ் ஹோலண்டே. அதே சமயத்தில் ஹோலண்டேவின் காதலி ஜூலி கயேத் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் அறிவித்தது.
2016ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் பிரான்ஸ் அதிபரின் காதலியை கதாநாயகியாக கொண்டு, ரோக் இண்டெர்நேசனல் நிறுவனத்துடன் இணைந்து பிரெஞ்ச் படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறியது. ஜனவரி 26, 2016ல் இந்தியாவும் ஃப்ரான்ஸூம் 36 போர் விமானங்களை வாங்குவதற்காக கையெழுத்திட்டது.
ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் DRAL (Dassault Reliance Aerospace Ltd) என்ற கூட்டணி கையெழுத்தான பின்பு, எட்டு வாரங்கள் கழித்து ரிலையன்ஸ் தயாரித்த பிரெஞ்ச் படமானது 2017 டிசம்பரில் வெளியிடப்பட்டது.
டவுட் லா ஹௌட் என்ற தலைப்பில் வந்த அந்த படம் அமீரகம், தைவான், லெபனான், பெல்ஜியம், எஸ்டோனியா, மற்றும் லட்டோவியா ஆகிய நாடுகளில் வெளியானது. 98 நிமிடம் ஓடும் இந்த படம் இந்தியாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ், ரோக் இண்டர்நேசனல் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்ட போது அவர்களிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.
ரபேல் போர் விமானங்களை தயாரிக்க இருக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ரிலையன்ஸ்

அதற்கு அடுத்த வருடம் ரபேல் விமானங்களை தயாரிக்க உள்ள டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் DRAL (Dassault Reliance Aerospace Ltd) என்ற கூட்டணியை தொடங்கியது ரிலையன்ஸ் டிபென்ஸ். அதில் 51% பங்கினை ரிலையன்ஸ் நிறுவனமும் 49% பங்கினை டஸ்ஸால்ட் நிறுவனமும் வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
டஸ்ஸால்ட் ஏவியேசன் செயற் தலைவர் எரிக் ட்ராப்பியர் மற்றும் அம்பானி இடையே
DRAL (Dassault Reliance Aerospace Ltd) ஒப்பந்தம் நாக்பூரில், பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லே மற்றும் இந்தியாவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் தேவிந்தர ஃபட்னாவிஸ் முன்னிலையில் கையெழுத்தானது. To read this article in English
ரபேல் போர் விமானம் தயாரிக்க டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டு சேரும் இந்திய நிறுவனங்கள்
ரபேல் விமானங்களின் ஆப்செட் தயாரிப்புகளுக்கு முதன் முதலில் தேர்வு செய்யப்பட்டது ரிலையன்ஸ் டிஃபன்ஸ் தான். எதிர் கட்சியினர் அனைவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஒப்பந்தம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பின.
இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியால் ஆப்ஃசெட்டினை தயாரிக்கும் பொறுப்புகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட 126 போர் விமான உற்பத்தி ஒப்பந்தம் பாஜக அரசால் கைவிடப்பட்டது.
ஆனால் இது குறித்து பதில் கூறிய மத்திய அமைச்சகம் டஸ்ஸால்ட் நிறுவனம், ரபேல் விமானங்கள் தயாரிப்பதற்கு இந்தியாவில் இதுவரை எந்த ஒரு ஆப்செட் நிறுவனத்தையும் தேர்வு செய்யவில்லை என்று மறுப்பு கூறியிருக்கிறது.
ஆஃப்செட் பாகங்கள் தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 30,000 கோடி வரையில் டஸ்ஸால்ட் நிறுவனம் ரிலையன்ஸ்ஸிற்கு கொடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் நிராகரித்து உள்ளது ரிலையன்ஸ்.
ஆஃப்செட் ஒப்பந்தங்களுக்கு சுமார் 100 நிறுவனங்கள் வரை அணுகலாம் என்றும், அதில் ஜாய்ண்ட் வென்ச்சர் மூலமாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் அல்லது பாரத் எல்க்ட்ரிகல்ஸ் கூடவோ இதில் பங்கு பெறலாம் என்று கூறியிருக்கிறது டஸ்ஸால்ட்.
காங்கிரஸ் கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு
ரபேல் திட்டத்தால் ரிலையன்ஸ் அதிகம் பயனடைந்துள்ளது என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அம்பானி மீது குற்றம் சுமத்தினார்.
அதிகுறித்து அம்பானி பேசுகையில் 36 போர் விமானங்களின் உற்பத்தியில் ரிலையன்ஸ் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்று கூறியுள்ளது.
இது போன்ற போர் விமானங்கள் தயாரித்து, பயன்பாடு, உபயோகம், பயிற்சி என அனைத்தும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர குறைந்தது 10 வருடங்கள் தேவைப்படலாம் என்று முந்தைய அரசாங்கம் அறிவித்திருக்க அனைத்தையும் ஒரு வருடத்தில் முடித்துவிட்டோம் என்று பெருமிதம் கொள்வது எப்படி என்றும் அடுக்கான குற்றங்களை முன் வைக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.