குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவுக்கு திங்கள்கிழமை (ஆக.8) பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆம் ஆத்மி முதன்முறை மாநிலங்களவை எம்.பி.யான ராகவ் சதா, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பிரியாவிடை கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.
முதல் காதல்
அந்தக் கடிதத்தில், “தாம் முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவையின் தலைவராக வெங்கையா நாயுடு இருந்தார். அதை நானும் மறக்கவில்லை, அவரும் மறக்கவில்லை. அது ரொம்ப அற்புதமான தருணம். முதல் நாள் பள்ளி, முதல் ஆசிரியர் மீதான முதல் காதல் போன்றது அது” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் என் நாடாளுமன்ற நாள்கள் வெங்கையா நாயுடுவின் கீழ் தொடங்கியது எனக் கூறி இந்தியில் பிரபலமன பாடல் ஒன்றையும் நினைவூட்டினார். இதைப் பார்த்து வெங்கையா நாயுடு புன்னகைத்தார்.
பெயர் மாற்றம்
காங்கிரஸ் எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், ‘வெங்கையா நாயுடு எண் 1, தியாக்ராஜ் மார்க்கில் குடிபெயர இருக்கிறார். அவரிடம் நான் சிறப்பு கோரிக்கை ஒன்றை வைக்கிறேன். நீங்கள் இந்திய மொழிகளில் சாம்பியன் ஆக திகழுகிறீர்கள். யார் இந்த தியாகராஜ்.
தமிழில் அவர் தியாகராஜர். தெலுங்கில் தியாகராஜா. ஆனால் டெல்லியில் தியாக்ராஜ். இதுதான் இந்தித் திணிப்பு. தியாகராஜர் கன்னட இசைமேதை. தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்தவர். ஆகவே அவரது பெயரை தியாகராஜர் என மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு, “நிச்சயமாக. கவலை வேண்டாம். அவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்த கன்னட சங்கீத இசை மேதை. பெயரை நிச்சயம் மாற்றுகிறேன்” என்றார்.
அறுசுவை உணவு
தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், வெங்கையா நாயுடு தமக்கு இறால் உள்ளிட்ட அசைவ உணவுகளை பரிமாறியுள்ளார் என்றார்.
மேலும் சமையல்காரர்கள் குண்டூர் மற்றும் விஜயவாடாவில் இருந்து விமானத்தில் பறந்து வந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். இது போன்ற உணவை கண்டு பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர், இதை பாஜக தலைவர் ஜெயப்பிரகாஷ் நட்டா கவனிக்க வேண்டும் என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“